உதயமார்த்தாண்டபுரத்தில் பறவைகளுடன் ‘குதூகல’ சுற்றுலா




கடலை நோக்கி பாய்ந்து வரும் ஆறுகள், அதில் இருந்து தண்ணீரை பெறும் வாய்க்கால், ஏரி, குளங்கள் மற்றும் அதையொட்டிய இடங்களில் எழில்கொஞ்சும் வயல் வெளிகள் இவை தான் காவிரி டெல்டாவின் ரம்மியமிகு அடையாளம்.

ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் டெல்டாவின் ஆறுகளும், வாய்க்கால்களும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டாலும் அதில் தண்ணீர் ஓடும் சில மாதங்கள் திருவிழா காலம் எனலாம். இங்கு நடக்கும் இயற்கையின் திருவிழாவை காண வெளிநாட்டு பறவைகள் ‘விசா’ ஏதுமின்றி டெல்டாவுக்கு சுற்றுலா வருகின்றன. அவ்வாறு சுற்றுலா வரும் வெளிநாட்டு பறவைகளின் ‘மீட்டிங் பாயிண்ட்’ உதயமார்த்தாண்டபுரம்.

ஓயாமல் ஒலிக்கும் பறவைகளின் பாடல்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ளது உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம். 44 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம் முழுவதும் பறவைகளின் ‘கீச், கீச்’ என்ற பாடலும், அதன் பின்னணியாக ‘பட, பட’ என்ற சிறகடிக்கும் சத்தமும் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட 13 சரணாலயங்களில் ஒன்றான உதயமார்த்தாண்டபுரம், 1999-ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

செல்லப்பிள்ளைகள்

பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் ஊதா கானான் கோழி, நத்தை குத்தி நாரை உள்ளிட்ட அரிய வகை பறவைகள் சரணாலயத்தின் வாசல் வரை வந்து சுற்றுலா பயணிகளை வரவேற்கின்றன. வெள்ளை அரிவாள் மூக்கன், புதிய பாறை நாரை, வெண்கலத்திநாரை, சாம்பல் நாரை, நாமக்கோழி, ஊதா நாரை, சிறிய நீர்காகம், துடுப்பு வாயன், சிங்காநாரை, நீலத் தாளை கோழி, இரவு நாரை, பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் இந்த சரணாலயத்தின் செல்லப்பிள்ளைகள் போல ‘தத்தி, தத்தி’ நடந்து வலம் வருவதை சுற்றுலா பயணிகள் ரசிக்கலாம்.

வலசை போகும் காலங்களில் வெளிநாட்டு பறவைகள் உதயமார்த்தாண்டபுரத்தில் சில காலம் முகாமிட்டு சுற்று வட்டார வான் பரப்பில் உற்சாகமாக வட்டமடித்து ஒய்யாரமாக வலம் வருகின்றன.

ரம்மியமான ஏரி

பறவைகள் பல ஆயிரம் கி.மீ. சிறகடித்து பறந்து இங்கு வருவது தான் சிறப்பு. இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழல் பறவைகளை இந்த சரணாலயத்துக்கு வரவேற்கின்றன. ‘சிங்கிள் பசங்க’ போல் இங்கு வரும் பறவைகள் ‘பேமிலியாக’ தங்கள் பசங்க கூட மீண்டும் தங்கள் வாழ்விடத்தை நோக்கி பறக்கின்றன.

உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்தையொட்டி ரம்மியமான ஏரி செல்கிறது. மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதி பெறுகிறது இந்த ஏரி. ஏரிக்கரையில் வளர்ந்திருக்கும் மரங்களில் பறவைகள் கூடு கட்டி சிலகாலம் குடும்பம் நடத்துகின்றன. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இந்த கூடுகளில் இருந்து பறவைகள் விடுபட்டு நிலப்பகுதியில் இரை தேடி அலைந்து குஞ்சுகளுக்கு உணவூட்டும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்குளிர ரசிக்கலாம். இந்த காட்சி கண்டவர்கள் மனதில் நீங்காத நினைவாக ‘நினைவோ ஒரு பறவை போல’ சிறகடித்து பறக்கும்.

பார்வை கோபுரங்கள்

நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்ற காலமாகும். இந்த மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சிறகடித்து பறக்கின்றன. வெப்ப அலை வீசும் இந்த கோடை காலத்தில் கூட வெயில் தெரியாத அளவுக்கு நிழல் தரும் மரங்களை கொண்டிருக்கிறது இந்த சரணாலயம். இங்கு உள்ள பார்வை கோபுரத்தில் ஏறி சுற்றுலா பயணிகள் பறவைகளின் நடமாட்டத்தை குழந்தைகளுடன் குதூகலமாக ரசிக்கலாம். சுற்றுலா ஆர்வலர்களுக்கு உதயமார்த்தாண்டபுரம் இயற்கையின் வரப்பிரசாதம்.

சீசன் எப்போது?

அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உதயமார்த்தாண்டபுரம் தற்காலிக ‘பறவைபுரமாக’ மாறி விடும். இந்த சீசன் நேரத்தில் வடகிழக்கு பருவமழை பொழிந்து மண்ணை குளிர்ச்சியாக மாற்றும். சில நேரங்களில் குளிர்பிரதேசம் போல குளிரும் அடிக்கும் என்பதால் இந்த சீசனே பறைவகளை கண்டுகளிக்க ஏற்ற காலம். வெள்ளை ஐபிஸ், இந்திய ரீப் ஹீரோன், வெள்ளை கழுத்துப் பருந்து, சாம்பல்-மண் நாரை, குட்நைட் ஹெரோன், ஊதா-ஹெரோன், சிறிய காரோமொரான்ட், ஸ்பூன் பில், டர்டர் உள்ளிட்ட பறவைகள் சீசன் தோறும் உதயமார்த்தபுரத்துக்கு வர தவறுவதில்லை. செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த சரணாலயத்தில் வசிக்கும் பறவைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

எப்படி செல்வது?

சாலை மார்க்கமாக உதயமார்த்தாண்டபுரம் திருவாரூரில் இருந்து 48 கி.மீ. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது. உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்துக்கு அருகில் உள்ள ரெயில் நிலையம் தில்லைவிளாகம். திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் ரெயிலில் ஏறி, தில்லைவிளாகம் வரலாம்.


பட்டாசு வெடிப்பதை தவிர்க்கும் மக்கள்


உதயமார்த்தாண்டபுரத்தில் நிலவும் அமைதியான இயற்கை சூழல் பறவைகளுக்கு புத்துணர்ச்சி தருகிறது. இந்த சூழலை கெடுத்து விடக்கூடாது என்பதில் இந்த பகுதியை சேர்ந்த மக்களும் கவனமாக உள்ளனர். பறவைகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீபாவளி போன்ற விசேஷ காலங்களில் பட்டாசு வெடிப்பதை இந்த பகுதி பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். வனத்துறை வசம் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலாவுக்கு ேதவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்ற குடில்கள் மற்றும் கழிவறை வசதிகளையும், பறவைகளை அருகில் இருந்து ரசிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். ஏரியில் படகு சவாரி விட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments