விபத்தில் 2 மகன்களுடன் பெண் உயிரிழப்பு: கணவரை வெளிநாட்டுக்கு வழியனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்!
சென்னை விமான நிலையத்தில் கணவரை வெளிநாட்டுக்கு வழியனுப்பி விட்டு சொந்த ஊருக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பெண் அவரது 2 மகன்கள், டிரைவர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

கணவரை வழியனுப்ப சென்னை வந்தனர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்பட்டாம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல். இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெய் பினிஷா (40). இவர்களுக்கு மிஷால் (20), அக்தல் (16), பைசல் (12) என 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்துல் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்து இருந்தார். மனைவி மற்றும் பிள்ளைகளுடன் விடுமுறையை கொண்டாடிவிட்டு மீண்டும் துபாயிக்கு செல்ல அப்துல் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு காரில் வந்தார்.

அவரை வழியனுப்ப மனைவி ஜெய் பினிஷா, மகன்கள் மிஷால், அக்தல், பைசல் ஆகியோர் வந்தனர். காரை மேல்பட்டாம் பாக்கத்தை சேர்ந்த டிரைவர் சரவணன் (50) என்பவர் ஓட்டினார். சென்னை விமான நிலையத்தில் அப்துலை வழியனுப்பி வைத்து விட்டு ஜெய் பினிஷா மகன்களுடன் சொந்த ஊருக்கு சென்றுகொண்டு இருந்தனர்.

தாய்-மகன்கள் உள்பட 4 பேர் பலி

நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென கட்டுபாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் சென்ற ஜெய் பினிஷா, மகன்கள் மிஷால், பைசல் மற்றும் டிரைவர் சரவணன் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அக்தல் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் அப்பளம்போல நொறுங்கியதால் காரில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காரில் இருந்து படுகாயம் அடைந்த அக்தல் மற்றும் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த அக்தல் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இரவு முழுவதும் காரை ஓட்டியதால் டிரைவர் சரவணன் தூக்க கலக்கத்தில் லாரி மீது மோதியது தெரிய வந்தது. இந்த விபத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments