பி.காம், கம்ப்யூட்டர் படிப்புகளுக்கு அதிக போட்டி: அரசு கலைக்கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள் 20-ந் தேதி கடைசி நாள்
அரசு கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பம் குவிந்த வண்ணம் உள்ளன. அதில் பி.காம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு அதிக போட்டி நிலவுகிறது. விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

அரசு கலைக்கல்லூரிகள்

தமிழகம் முழுவதும் மொத்தம் 164 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. அங்குள்ள 140 பாடப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் படிக்க முடியும். இந்த கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அதில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த 6-ந் தேதியே விண்ணப்பிக்கும் பணியும் தொடங்கியது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் பணம் செலுத்தியுள்ளனர்.

பி.காம், கம்ப்யூட்டர் பாடங்களுக்கு ஆர்வம்

இந்த இணையதளத்தில் ஒரு மாணவர், எத்தனை அரசு கல்லூரிகளிலும், எத்தனை பாடப்பிரிவுகளிலும் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு ஒரு மாணவர் 5 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு எத்தனை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தாலும் ரூ.50 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் வெறும் 2 ரூபாய் மட்டுமே.

முந்தைய ஆண்டுகளை போல இந்த ஆண்டும் மாணவர்கள் பி.காம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன் வெளிப்பாடாக அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் செய்தவர்கள் இந்த பாடப்பிரிவுக்கே அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கணக்கு மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து விண்ணப்பம் செய்துள்ளனர். வருகிற 20-ந் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பம் செய்தாவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் கேட்டு கொண்டுள்ளது.

தரவரிசை பட்டியல்

கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் விண்ணப்பிக்கும் தேதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டதால் 20-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பம் செய்வதற்கான தேதி நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

வருகிற 24-ந் தேதி மாணவர்களின் தரவரிசை பட்டியல் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெகிறது. அதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, தேசிய மாணவர் படை மற்றும் முன்னாள் ராணுவனத்தினர் பிள்ளைகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

அடுத்த மாதம் (ஜூன்) 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வு நடைபெறும். 2-ம் கட்ட கலந்தாய்வு 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. ஜூலை மாதம் 3-ந் தேதி கல்லூரி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments