அதிராம்பட்டினத்தில் திடீரென உள்வாங்கிய கடல்! சேற்றில் படகுகள் சிக்கியதால் மீனவர்கள் அவதி!!



அதிராம்பட்டினத்தில், திடீரென கடல் உள்வாங்கியது. படகுகள் சேற்றில் சிக்கியதால் மீனவர்கள் அவதி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஏரிப்புறக்கரை, கரையூர் தெரு, காந்தி நகர், மறவக்காடு, ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கீழத்தோட்டம் ஆகிய பகுதியில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை திடீரென கடல் உள்வாங்கியது. 100 மீட்டர் தூரத்திற்கு வரை கடல் உள்வாங்கி இருந்தது. தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதில்லை. நாட்டுப்படகுகள் எனப்படும் பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏரிப்புறக்கரை மீனவர்கள் நேற்று காலை 6 மணிக்கு கரை திரும்பினர். அப்போது கடல்நீர் உள்வாங்கி கடற்கரை சேறும், சகதியுமாக இருந்ததால் படகுகள் சிக்கிக்கொண்டன. சேற்றில் சிக்கிய படகை மீட்க முடியாமல் மீனவர்கள் அவதிப்பட்டனர்.

பின்னர் 3 மணி நேரம் கழித்து மீண்டும் கடல் சகஜ நிலைக்கு திரும்பியதால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுக வாய்க்காலுக்கு கொண்டு சென்றனர். இரவு முழுவதும் கண்விழித்து கஷ்டப்பட்டு மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய நிலையில் கடல் திடீரென உள்வாங்கியதால் சேற்றில் சிக்கிய படகுகளை மீட்க முடியாமல் மீனவர்கள் சோர்வடைந்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறோம். இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை எடுத்துச்செல்ல துறைமுக வாய்க்காலுக்கு செல்வது வழக்கம்.

அப்போது அடிக்கடி கடலில் ஏற்படும் சீற்றங்களால் கடலின் தரைப்பகுதியில் உள்ள சேறு அனைத்தும் துறைமுக வாய்க்காலில் வந்து விடுகிறது. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை எடுக்க வாய்க்காலில் இறங்கும்போது முழங்கால் அளவுக்கு சேறு இருப்பதால் நடக்க முடியாமலும், படகுகளை எடுக்க முடியாமலும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டாமல் இருந்து விடுகின்றனர். ஏரிப்புறக்கரை துறைமுக வாய்க்கால்களை முறையாக தூர்வாரி இருபுறமும் சுற்றுச்சுவர்கள் அமைக்க வேண்டும்.

ஏரிப்புறக்கரை துறைமுக வாய்க்காலில் 7 அடி உயரம் வரை தண்ணீர் இருந்தால் படகுகளை மீன்பிடிக்க கடலுக்கு கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்’ என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments