தமிழகத்தில் உதயமானது 4 மாநகராட்சிகள்.. தி.மலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி. மசோதா நிறைவேற்றம்





சென்னை: 4 நகராட்சிகள், மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அவை நிறைவேற்றப்பட்டன. இதன்மூலம், திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை மாநகராட்சிகளாக உதயமாகின்றன.






காரைக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட 4 நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர். கே.என்.நேரு நேற்றைய தினம் மசோதா தாக்கல் செய்தார்.

பாதாள சாக்கடை: தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு செய்து கொடுக்கவும், பெருநகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளை இணைத்து, பெரு நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை பிறப்பித்திருந்தது.

அதன்படி, பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து இந்த புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. இது தொடர்பாக, நேற்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை: அந்த மசோதாவில், "3 லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்டுள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் நகராட்சி மன்றங்களை உள்ளடக்கிய உள்ளாட்சி பகுதிகளின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் ஆன்மீக சுற்றூலா பயணிகளை ஈர்த்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு மார்ச் 15ம் தேதி 2024ம் ஆண்டு மாநகராட்சிகளாக உருவாக்கிட கருதப்பட்டுள்ளது. எனவே இந்த சட்ட முன்வடிவானதை செயல்வடிவம் கொடுக்க அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த சட்ட மசோதா இன்றைய தினம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சியை தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது... நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது

மாற்றங்கள்: இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உருவாகி உள்ளது.

அதுபோல, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சியும் என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகள் உருவாகியுள்ளன.

இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உயரும். பொதுமக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments