திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் சட்டமன்றத்தில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்




திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கருமாணிக்கம் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

கருமாணிக்கம் எம்.எல்.ஏ.

திருவாடானை தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து கருமாணிக்கம் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இதில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தை ஏராளமான பெண்கள் வரவேற்று உள்ளனர். இதேபோல் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் என அரசு அறிவிக்க வேண்டும்.தொண்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும். ராமநாதபுரம் பகுதியில் அரசு பஸ்கள் அனைத்தும் பழைய பஸ்களாகவே இயக்கப்படுகிறது.எனவே எங்கள் மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி புதிய பஸ்களை வழங்க வேண்டும்.

திருவாடானையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்க வேண்டும். அதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மண்டபம் யூனியன் ஆற்றங்கரை அழகன்குளம் சித்தார்கோட்டை பனைக்குளம் பகுதியில் இருந்து மதுரைக்கு புதிய பஸ் வழித்தடம் தொடங்க வேண்டும். திருவாடானை யூனியன் எஸ்.பி. பட்டினத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்து நிறைவேற்ற வேண்டும்.

பேரூராட்சியாக...

ராமநாதபுரம், திருவாடானை பகுதியில் ஆதிதிராவிட மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களில் தமிழக அரசு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்து சமுதாயக்கூடங்களை கட்டி தர வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு அரசின் சார்பில் ரூ.7 லட்சத்தில் புதிய வீடுகள் கட்டி தர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.580 கோடி செலவில் புதிய திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சருக்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சி.கே.மங்கலத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை திருவாடானையில் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாடானை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். 6 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் நோயாளிகள் ராமநாதபுரம், சிவகங்கைக்கு செல்ல வேண்டும்.எனவே கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.இங்கு குளிரூட்டப்பட்ட பிணவறை வசதி வேண்டும். இதே போல் ஆனந்தூர் ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

பயிர் காப்பீட்டு தொகை

திருவாடானையில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். திருவாடானை சட்டமன்ற தொகுதியில் உள்ள யூனியன் கண்மாய்கள், பொதுப்பணித்துறை கண்மாய்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு மடைகள், ஷட்டர்களை சீரமைக்க வேண்டும்.

ராமநாதபுரம் பெரிய கண்மாயை அரசு தூர்வார வேண்டும். விவசாய நிலங்களை மேம்படுத்த விவசாயிகள் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மழை பெய்தாலும் வறட்சி ஏற்பட்டாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசு உடனடியாக பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். திருவாடானை அரசு கல்லூரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர் விடுதி அமைக்க வேண்டும். மேலும் சக்கரக்கோட்டை பட்டினம்காத்தான் சூரங்கோட்டை போன்ற பகுதிகளை ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments