ரேட்டிங் ஸ்டார் கொடுத்தால் லாபம் என கூறி அரசு மருத்துவத்துறை ஊழியரிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ரேட்டிங் ஸ்டார் கொடுத்தால் லாபம் கிடைக்கும் என கூறி அரசு மருத்துவத்துறை ஊழியரிடம் ரூ6 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் பகுதிநேர வேலை

தஞ்சை அபிராமபுரம் பகுதியை சேர்ந்த 39 வயது நிரம்பியவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவத்துறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் தனது செல்போனில் டெலிகிராம் செயலியை பயன்படுத்தினார்.

அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை என்றும், ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அதன் மூலம் அதிக லாபம் பெறலாம் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த விளம்பரத்திற்கு கீழே விண்ணப்பிப்பதற்கான லிங்க்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த லிங்க்கை ‘கிளிக்’ செய்தபோது அது நேரிடையாக மற்றொரு சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப் குரூப்பிற்கு சென்றது.

‘ரேட்டிங் ஸ்டார்’

அந்த குரூப்பில் இருந்த நபர்கள் தங்களுக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த டாஸ்க்கில் புகைப்படங்களுக்கு ‘ரேட்டிங் ஸ்டார்’ கொடுத்து அனுப்புவதன் மூலம் அதிக லாபம் கிடைத்ததாக ஆசைவார்த்தை கூறினார்.அந்த டாஸ்க்கை செய்ய முடிவெடுத்த அவருக்கு, டாஸ்க்குகள் அட்டவணை முறைப்படி கொடுக்கப்பட்டது. அதில் பிரபலமான விடுதியின் புகைப்படங்களுக்கு ‘ரேட்டிங் ஸ்டார்’ கொடுத்து ‘ஸ்கிரீன்ஷாட்’ அனுப்ப தொடங்கினார்.

ரூ.6 லட்சம் மோசடி

இதனையடுத்து அவருக்கு எந்த முதலீடும் இல்லாமல் ரூ.150 கிடைத்தது. பின்னர் அடுத்த டாஸ்க்கை செய்ய தொடங்கிய அவர் ரூ.2 ஆயிரம் அனுப்பிய நிலையில் ரூ.2 ஆயிரத்து 800 லாபமாக கிடைத்தது. இதனையடுத்து அவர் பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கான லாபத்தொகை கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு மறுமுனையில் பேசியவர், நீங்கள் முழு டாஸ்க்கையும் செய்து முடித்தால்தான் உங்களுக்கான லாபம் கிடைக்கும் என்றதோடு மேலும் பணம் கட்டுமாறு கூறியுள்ளார்.

அப்போதுதான் அந்த வாலிபர் தனக்கு மோசடி நடந்ததை உணர்ந்தார். இதனையடுத்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments