மீமிசல் அருகே பரிதாபம்: பஸ்சுக்காக காத்திருந்த 2 பெண்கள் லாரி மோதி உயிரிழப்பு - இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மறியல்!
மீமிசல் அருகே பஸ்சுக்காக காத்திருந்த 2 பெண்கள் லாரி மோதி உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பஸ்சுக்காக...

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசங்கரை பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி குஞ்சம்மாள் (வயது 56). முத்துவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் மகிழன் மனைவி காளீஸ்வரி (45). இவர்கள் இருவரும் நேற்று காலை மீமிசல் அருகே உள்ள அரசங்கரை சோதனை சாவடியில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி, அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கம்பிகளை உடைத்துக் கொண்டு பஸ்சுக்காக காத்திருந்த 2 பெண்கள் மீது மோதியது. மேலும் லாரி அவர்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

டிரைவர் கைது

இதையடுத்து லாரியுடன் டிரைவர் தப்பிக்க முயன்றார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் லாரியை மறித்து நிறுத்தி, டிரைவரை பிடித்து வைத்திருந்தனர். பின்னர் இதுகுறித்து திருப்புனவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போலீசாரிடம் லாரி டிரைவரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் திருவாரூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (56) என்பது தெரியவந்தது. டிரைவர் மதுபோதையில் லாரியை ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

சாலை மறியல்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் குவிந்தனர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே போலீசார், 2 பெண்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புனவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மீமிசல் அருகே பஸ்சுக்காக காத்திருந்த 2 பெண்கள் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments