ராமேசுவரம் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் நவாஸ்கனி எம்.பி. பேட்டி
ராமேசுவரம் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என நவாஸ்கனி எம்.பி. கூறினார்.

மக்கள் நல திட்டங்கள்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி எம்.பி. அதிகமான வாக்குகள் பெற்று 2-வது முறையாக வெற்றி பெற்றார். அதன்பின்னர் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று நேற்று ராமநாதபுரம் நேரு நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய பிரமுகர்கள், அரசுத்துறை அலுவலர்கள், வர்த்தகர்கள், எமனேசுவரம் தேவேந்திர குல வேளாளர் சங்கம் மற்றும் பலரும் நவாஸ்கனி எம்.பி.க்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றிய மக்கள் நல திட்டங்களை கவனித்த மக்கள் எனக்கு 2-வது முறையாக மகத்தான வெற்றியை அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் ஆலோசனைகள்

மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் நாடாளுமன்றத்தில் கோரிக்கைகளாக வைத்து தொடர்ந்து குரல் கொடுப்பேன். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்திருக்கிறேன். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்தும் இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

எனது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை நான் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தளவு முயற்சிகள் மேற்கொண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தர தொழில்துறைகள் அமைத்திட முயற்சிகளை மேற்கொள்வேன். முதல்-அமைச்சர் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

வாக்காளர்களுக்கு நன்றி

அதன்படி வாக்களித்து வெற்றி பெற செய்த மக்கள் அனைவரையும் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி தர வேண்டும். அலுவலகங்கள் தினந்தோறும் திறந்து வைக்க வேண்டும். அதற்கான நேரங்களை அறிவிப்பு பலகையில் அறிவித்து தொலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும். தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன்படி தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். இவ்வாறு கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற அலுவலக உதவியாளர் அப்துல் ஜப்பார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments