பொற்பனைக்கோட்டை, கீழடி உள்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வரலாற்றுத்தொன்மை
தமிழ்நாடு 15 லட்சம் ஆண்டுகள் மனித வரலாற்றுத்தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். கீழடி அகழாய்வு மிகப்பெரிய தாக்கத்தை தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. 6-ம் நூற்றாண்டில் படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்றிருந்ததை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் நிலைநிறுத்தியுள்ளன. பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல் உமி பகுப்பாய்வு உறுதி செய்கிறது.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தொடங்கி வைத்தார்
பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டில் 8 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் இந்த ஆண்டிற்கான அகழாய்வு பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் கொந்தகை (10-ம் கட்டம்), விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை (3-ம் கட்டம்), திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி (2-ம் கட்டம்), புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை (2-ம் கட்டம்), தென்காசி மாவட்டம் திருமலாபுரம் (முதல் கட்டம்), கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் (முதல் கட்டம்), திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் மருங்கூர் (முதல் கட்டம்) ஆகிய 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.
கண்டெடுக்கப்பட்டவை
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கடந்த 6.4.2023 அன்று முதல்-அமைச்சர் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்திருந்தார். அந்த அகழாய்வில் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கீழடி 9-ம் கட்ட அகழாய்வில், 14 குழிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தங்க அணிகலன், தந்தத்தினாலான பகடைகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களிகள், வட்டச்சில்லுகள், அஞ்சனக் கோல்கள், செப்புக் காசுகள், செப்பு ஊசி, இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என 804 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
தொல்பொருட்கள்
வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில், 7,800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கீழ்நமண்டியில் 21 ஈமப்பேழைகள் கண்டறியப்பட்டன. கீறல் குறியீட்டு பானை ஓடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொற்பனைக்கோட்டையில், வட்ட வடிவ சுட்ட செங்கற்கட்டுமானம் கண்டறியப்பட்டது. தமிழி (தமிழ் பிராமி) எழுத்து பொறிக்கப்ட்ட மண்கல ஓடு ஆகியவை கிடைத்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெறும் இடத்தில் மண்ணில் குழிகளை தோண்டும் பணியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். அதன்பின் அகழாய்வு பணிகள் நடைபெற்ற இடத்தையும், அதில் கிடைத்த பொருட்களையும் அவர் பார்வையிட்டார். 2-ம் கட்ட அகழாய்வு பணி குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பொற்பனைக்கோட்டையில் அரண்மனை திடல் எனும் இடம் அருகே தெற்கு பகுதியிலும், வடக்கு கோட்டைக்கரை பகுதியிலும் மண்ணில் குழி தோண்டி அகழாய்வு பணி நடைபெறும். இந்த பணிகள் சுமார் 6 மாதம் நடைபெறும்'' என்று தெரிவித்தனர்.
பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் 6 மாதங்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொற்பனைக்கோட்டை
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்கு சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் திகழ்கிறது. இந்த கோட்டையானது 44.88 ஏக்கர் பரப்பளவிலும், கோட்டைக்குள் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடப்பகுதியாகவும் உள்ளது. இதில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான செங்கல் கட்டுமானங்கள், பானை ஓடுகள் உள்பட தொல்லியல் அடையாளங்கள் கிடைத்தன. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் கடந்த 2021-ம் ஆண்டு பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
2-ம் கட்ட அகழாய்வு
அதன்பின்னர் தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் தொடங்கி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் கோட்டையின் மையப்பகுதி அரண்மனை திடல் எனும் இடத்தில் 22 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் தங்க அணிகலன், எலும்பு முனைகருவி உள்பட 533 அரிய பொருட்கள் கிடைத்தன. இது கணினியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள தமிழக அரசின் தொல்லியல் துறை முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் தொல்லியல் துறை அனுமதி கிடைத்தது. இதையடுத்து பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நேற்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற விழாவில் அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
6 மாத காலம்
இதையடுத்து பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெறும் இடத்தில் மண்ணில் குழிகளை தோண்டும் பணியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். அதன்பின் அகழாய்வு பணிகள் நடைபெற்ற இடத்தையும், அதில் கிடைத்த பொருட்களையும் அவர் பார்வையிட்டார். 2-ம் கட்ட அகழாய்வு பணி குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பொற்பனைக்கோட்டையில் அரண்மனை திடல் எனும் இடம் அருகே தெற்கு பகுதியிலும், வடக்கு கோட்டைக்கரை பகுதியிலும் மண்ணில் குழி தோண்டி அகழாய்வு பணி நடைபெறும். இந்த பணிகள் சுமார் 6 மாத காலம் நடைபெறும். இதற்காக குறிப்பிட்ட நிதியை தமிழக அரசு ஒதுக்கும்'' என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தொல்லியல் துறை உதவி இயக்குனர் தங்கதுரை, திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.