பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பதிவின் நிலையை விவசாயிகள் தெரிந்து கொள்வது எப்படி? வேளாண் அதிகாரி விளக்கம்




பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பதிவின் நிலையை விவசாயிகள் தெரிந்து கொள்வது எப்படி? என்பது குறித்து வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நிதி உதவி திட்டம்

பிரதமரின் நிதி உதவி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இம்முறை 17-வது தவணைத் தொகை கடந்த 18-ந் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. பி.எம்.கிசான் நிதித் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் புதிய பயனாளிகள் இணைந்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு இத்திட்ட நிதி உதவி கிடைக்காமல் இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பயனாளிகளின் பெயரில் (நேரடி பட்டா) இல்லாத விவசாயிகள், இறந்த விவசாயிகளின் பெயர்கள் பி.எம்.கிசான் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. எனவே, உங்கள் பெயர் பயனாளிகளின் பட்டியலில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

இணையதள முகவரி

இதனை தெரிந்து கொள்வதற்கு, பி.எம்.கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, (https://pmkisan.gov.in) முகப்பு பக்கத்தின் கீழ்பகுதியில் பார்மர்ஸ் கார்னர் என்ற ஒரு பகுதியை காண்பீர்கள். அந்த பிரிவில் `உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்' என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதனை கிளிக் செய்தவுடன் ஒரு தனிப் பக்கம் திறக்கும். அங்கு பயனாளிகள் தங்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

பின்னர் அதற்கு அடுத்துள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். பின்னர் "Get OTP" என்பதைத் தேர்வு செய்யவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு OTP பெறப்படும். பெறப்பட்ட OTP எண்ணை உள்ளிடவும். பின்னர் பயனாளிகளின் பட்டியல் திறக்கப்படும். அதில், விவசாயிகள் தற்போதைய பி.எம்.கிசான் நிலையினை அறிந்து கொள்ளலாம்.

செல்போன் எண்

மேலும், தங்கள் பதிவு எண் நினைவில் இல்லாதவர்கள் தங்கள் நிலையை அறிந்து கொள்ள Know your Status பகுதியில் Know your Registration no என்பதை தேர்ந்தெடுக்கவும். செல்போன் எண் அல்லது ஆதார் எண் அளித்தால் பதிவு எண்ணை தெரிந்து கொள்ள இயலும்.

மீண்டும் Know your Status பகுதியில் பதிவு எண்ணை உள்ளீடு செய்தால் பி.எம்.கிசான் நிதித் திட்டத்தில் விவசாயிகள் தற்போதைய நிலையினை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments