தொண்டி அருகே தலையில் குழவிக்கல்லை போட்டு வாலிபர் கொலை நண்பர் கைது




முன்விரோதத்தில் வாலிபரின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முகம் சிதைந்த நிலையில் பிணம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை மேலத்தெருவை சேர்ந்தவர் சிராஜுதீன் மகன் முகமது அபூபக்கர் (வயது 26). ஓட்டல் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரது மகன் மிர்சன் அலி (38). ஓட்டல் தொழிலாளி. இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற முகமது அபூபக்கர், வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் மிர்சன் அலியின் வீட்டின் பின்புறம் முகமது அபூபக்கர் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் அபூபக்கரின் உடலை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து முகமது அபூபக்கரின் தந்தை சிராஜுதீன், தொண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு நிரேஷ், தலைமையில் பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் பானு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அபூபக்கரின் உடலை பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பரிடம் விசாரணை

இதுதொடர்பாக அவரது நண்பர் மிர்சன் அலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் தெரிவித்துள்ளதாவது:- மிர்சன் அலிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. மேலும் மிர்சன் அலியின் மனைவிக்கும் முகமது அபூபக்கருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த மிர்சன் அலி ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

குழவிக்கல்லை போட்டு கொன்றார்

நேற்று முன்தினம் இரவு முகமது அபூபக்கரும், மிர்சன் அலியும் இவரது வீட்டின் பின்புறத்தில் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மிர்சன் அலி, முகமது அபூபக்கரின் தலையில் அருகில் கிடந்த குழவிக்கல்லை போட்டதாகவும், இதில் தலை நசுங்கி முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே முகமது அபூபக்கர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரியவருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைக்குமார் வழக்குப்பதிவு செய்து மிர்சன் அலியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments