கண்மாய்- குளங்களில் வண்டல், களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் கலெக்டர் தகவல்




கண்மாய், குளங்களில் வண்டல்மண், களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டல், களிமண்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய பணி மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 511 கண்மாய் மற்றும் குளங்களில் வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளில் இருந்து மண் எடுக்க www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அளவிலேயே அனுமதி பெற்று தங்களது சொந்த செலவில் வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ளலாம்.

அனுமதி வழங்கப்படும்

விவசாய பயன்பாட்டிற்காக விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது நிலம் தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையினரால் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய தாசில்தார் அனுமதி வழங்கப்படும். மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு விண்ணப்பம் செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலின் உண்மை தன்மை சான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிர்வாக அலுவலரால் சான்று அளிக்க வேண்டும்.

விவசாய பயன்பாட்டிற்கு நன்செய் நிலமாக இருந்தால் ஒரு நபருக்கு ஏக்கருக்கு 75 கன மீட்டரும், புன்செய் நிலமாக இருந்தால் ஒரு நபருக்கு ஏக்கருக்கு 90 கன மீட்டரும், இதே போல் மண்பாண்டம் செய்யும் நபருக்கு 60 கனமீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments