தொண்டியில் வீட்டுவரி ரசீது வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்; பேரூராட்சி அதிகாரி உள்பட 3 பேர் கைது




வீட்டுவரி ரசீது வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீட்டு வரி ரசீது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அனீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம்ஷா. இவர் தொண்டியை சேர்ந்த அம்ஜத் அலி என்பவருக்கு சொந்தமான வீடு, காம்ப்ளக்ஸ் மற்றும் கட்டிட பணிகளை கவனித்து வருகிறார்.

மேற்கண்ட வீட்டு வரி ரசீது வழங்கக்கோரி பேரூராட்சி செயல் அதிகாரி மகாலிங்கம் மற்றும் அலுவலக இளநிலை உதவியாளர் ரவி ஆகியோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டனராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது இப்ராகிம்ஷா, இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

3 பேர் கைது

ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முகமது இப்ராஹிம் ஷாவிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர். இந்த பணத்துடன் அவர் நேற்று தொண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அந்த பணத்தை பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் தொண்டியை சேர்ந்த ராஜா என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அவ்வாறு ரூ.20 ஆயிரத்தை கொடுத்தபோது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜாவை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து ரவியையும் கைது செய்தனர்.

இதற்கிடையே பேரூராட்சி செயல் அதிகாரி மகாலிங்கம் சிவகங்கையில் நடைபெற்ற பேரூராட்சிகளின் உதவி இயக்குனரின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரையும் கைது செய்து பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த நடவடிக்கை தொண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments