விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் கல்யாணசுந்தரம் எம்.பி. கோரிக்கை




விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கல்யாணசுந்தரம் எம்.பி. கூறினார்.

விக்கிரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணி

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கல்யாணசுந்தரம் எம்.பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆமை வேகத்தில் நடைபெறும் விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை வழங்கினார். இதை தற்போதைய தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகிறார். இத்திட்டத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி விவசாயிகளின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 2015-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை அடிக்கல்லோடு நின்று விட்டது. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணியை மத்திய அரசு உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.

வெள்ளப்பாதிப்பு நிதி

கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை பகுதியில் நான்கு மாவட்டங்களிலும், தூத்துக்குடி, நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகளை மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு சென்றனர்.

மத்திய குழுக்கள் பாதிப்புகளை பார்வையிட்டு பரிந்துரை செய்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தும், தொடர்ந்து பல கடிதங்கள் மூலம் வற்புறுத்தியும், தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை வெள்ளபாதிப்பு நிதி வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டுக்கான மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டு மக்களுக்கு, வெள்ளச்சேதங்களுக்கு நிதி வரும் என ஆவலோடு எதிர்பார்த்தோம். ஏமாற்றம் தான் எங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே மத்திய அரசு இனியாவது பரிசீலனை செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments