சுற்றுலா, வர்த்தக வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு




சுற்றுலா, வர்த்தக வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் நாகை- இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நாகையில் கடல் வாணிபம்

சோழர்களின் ஆட்சி காலத்தில் துறைமுக நகரமாக நாகை விளங்கியது. நாகையில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. காலப்போக்கில் கடல் வாணிபத்தில் நாகை தனது செல்வாக்கை படிப்படியாக இழந்து விட்டது.

நாகை துறைமுகத்தை பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என பல ஆண்டு காலமாக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந் தேதி கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ‘செரியாபாணி’ என்ற பயணிகள் கப்பல் நாகையில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு இயக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி அதே அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒரு சில நாட்களே கப்பல் போக்குவரத்து நடந்ததால் நாகை பகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்கும்? என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர்.

பயணிகள் அதிர்ச்சி

அதன்படி கடந்த மே மாதம் 13-ந் தேதி முதல் ‘சிவகங்கை’ என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கப்பல் திட்டமிட்டபடி இயக்கப்படவில்லை. சட்டரீதியான அனுமதிகள், கப்பலின் தாமதமான வருகை உள்ளிட்ட காரணங்களால் கப்பல் போக்குவரத்து 2 முறை ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியாக ரத்து செய்யப்பட்டு விட்டது.

அந்த கப்பலில் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நாகை- இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டம் வெறும் சம்பிரதாயத்துக்காக தொடங்கப்பட்டதா? இந்த திட்டத்துக்கு விடிவு காலமே இல்லையா? என தற்போது பல்வேறு தரப்பினரும் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சுற்றுலா-வர்த்தக வளர்ச்சி

சுற்றுலா, வர்த்தக வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் நாகை- இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து வை.செல்வராஜ் எம்.பி. கூறியதாவது:-

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் திட்டம்தான். வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம் பல்வேறு நிர்வாக காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சரிடம் மனு அளிப்பேன். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை போல, பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையிலும் மத்திய அரசு பாராமுகம் காட்டக்கூடாது.

வர்த்தக உறவு மேம்படும்

நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்த்குமார்:-

நாகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவமழையை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. கடந்த மே மாதம் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவித்தார்கள். தனியார் மூலம் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அனால் அந்த நிறுவனத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதி கிடைக்காமல் போய்விட்டது. பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கினால் இந்தியா - இலங்கை இடையே வர்த்தக ரீதியில் உறவு மேம்படும். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அனைத்து கால நிலைகளிலும் இயங்கும் வகையில் பயணிகள் கப்பலை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து நாகை துறைமுக அலுவலர் மானேக்சா கூறுகையில், ‘பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments