போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இலந்தை மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு




அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இலந்தை மரக்கி்ளைகள் வெட்டி அகற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை

தஞ்சை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், ராஜாமடம் வழியாக செல்கிறது. ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி - சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக உள்ளூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வௌி மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

இலந்தை மர முட்கள்

இந்நிலையில் ராஜாமடம் சோதனை சாவடியில் இருந்து நசுவினி காட்டாறு செல்லும் சாலையில் இருபுறமும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் இலந்தை மரங்கள் புதர் போல் மண்டிக்கிடக்கின்றன. எதிரே கனரக வாகனங்கள் வரும் போது டூவீலரில் செல்வோர் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழி விட ஒதுங்கும்போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் நீண்டு வளர்ந்துள்ள இலந்தை மர முட்களில் சிக்கி கொள்கின்றனர்.

வெட்டி அகற்ற கோரிக்கை

இதனால் அவர்களின் முகம் மற்றும் கண் பகுதிகளில் இலந்தை மரத்தில் உள்ள முட்கள் கிழித்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள இலந்தை மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments