அதிராம்பட்டினம் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்குவதால் மீனவர்கள் அவதி




அதிராம்பட்டினம் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்குவதால் மீனவா்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கடல் உள்வாங்கியது

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நேற்று முன்தினம் வரை பலத்த காற்று வீசியது. நேற்று அதிகாலையில் காற்றின் வேகம் குறைந்து காணப்பட்டது. கடலுக்கு மீன் பிடிக்க ஏரிப்புறக்கரை மீனவர்கள் காலை 5 மணி அளவில் மீன் பிடிக்கச் செல்வதற்காக துறைமுகம் வந்தனர்.

அப்போது கடலில் துறைமுக வாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தண்ணீரின்றி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். துறைமுக வாய்க்காலில் எந்த நேரமும் 5 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருக்கும். ஆனால் நேற்று தண்ணீர் இன்றி கரையில் இருந்து சுமார் 2 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கி தண்ணீர் இல்லாமல் வெறும் தரையை போல் காட்சியளித்தது.

சேற்றில் சிக்கிய படகுகள்

இதனால் மீன்பிடிக்க செல்ல இருந்த பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வீடு திரும்பினர்.ஒருசில நேரங்களில் 10 மீட்டர் தூரம் வரைதான் கடல் உள்வாங்கும் ஆனால் நேற்று 100 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது. இது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடிக்க சென்று விட்டு திரும்பிய மீனவர்கள், கடல் உள்வாங்கி இருந்ததால் படகை கரைக்கு கொண்டு வரமுடியாமல் அவதிப்பட்டனர். கடந்த 2 நாட்களாக கடல் அதிக அளவில் உள்வாங்கியதால் மீனவர்கள் சேற்றில் சிக்கிய படகுகளை கடும் சிரமத்துடன் கரைக்கு கொண்டு வந்தனர்.

தூர்வார வேண்டும்

இதுகுறித்து ஏரிப்புறக்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில் நேற்று அதிகாலை மீன் பிடிக்க வந்து போது கடல் உள்வாங்கி இருந்தது. அதிக தூரம் கடல் உள்வாங்கியதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் திரும்பி விட்டோம்.

அடிக்கடி கடல் உள்வாங்குவதால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிப்படைந்து மீனவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை துறைமுக வாய்க்கால் 5 அடி ஆழம் குறையாமல் கடல் நீர் இருக்கும். கஜா புயலால் துறைமுக வாய்க்கால் முற்றிலும் தூர்ந்து கடல் உள்வாங்கும் நேரத்தில் துறைமுக வாய்க்காலில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் தவிர்த்து வருகிறோம். துறைமுக வாய்க்காலை தூர் வாரினால் தான் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல ஏதுவாக இருக்கும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments