இரு இடங்களில் பெயர் இருந்தால் வாக்காளரின் அனுமதியுடன் பட்டியலில் பெயர் நீக்கம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்




வாக்காளர் பட்டியலில் இரு இடங்களில் பெயர் இருந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளரின் அனுமதி பெற்ற பிறகே அவரது பெயர் நீக்கம் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடங்க உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, புதிதாக குடியேறியவர்கள், முகவரியில் இருந்து மாறியவர்கள், புதிதாக திருமணமாகி சென்றவர்கள், திருமணமாகி வந்தவர்கள், இறந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கின்றனர். அந்த விவரங்களை உரிய செயலியில் பதிவு செய்து கொள்கின்றனர்.

அதோடு, 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களின் விவரங்களையும் பதிவு செய்து கொள்கின்றனர். மேலும், அடையாள அட்டையில் உள்ள புகைப்படம் சரியில்லை என்று வாக்காளர் யாரும் கூறினால், அவற்றை மாற்றுவதற்கான பணிகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள். வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றிற்கு விண்ணப்பிப்பது குறித்து அறிவுறுத்துவார்கள். வாக்காளர்களை நேரில் சந்தித்து விவரங்கள் பெற வேண்டும் என்பதற்காகவே 2 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும் வரும் அக்டோபர் 29-ந்தேதி முதல், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடங்கும்.

பெயர் இரட்டை பதிவு

தற்போது மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதற்காக, வாக்காளர் பெயர், புகைப்படம், தந்தை பெயர், வசிப்பிடம், பிறந்த தேதி, வயது இவற்றின் ஒற்றுமை அடிப்படையில், கணினி வாயிலாக ஒத்துப்போகும் வாக்காளர்கள் விவரங்கள் எடுக்கப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின்படி வாக்காளர் ஒருவரின் பெயர் இரு வேறு இடங்களில் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அந்த வாக்காளருக்கு கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் அவர் விரும்பும் ஒரு இடத்திற்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் வகையில் அடுத்த இடத்தில் உள்ள பெயர் நீக்கப்படும். ஏனென்றால், எந்தவொரு வாக்காளரின் பெயரையும் உடனடியாக நீக்கிவிடக் கூடாது என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

அனுமதியுடன் நீக்கம்

அதன்படி, முதலில் கடிதம் எழுதப்பட்டு அந்த கடிதத்துக்கு 15 நாட்களுக்குள் பதில் பெறப்படும். அந்த நாட்களுக்குள் பதில் வராதபட்சத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் கள ஆய்வு செய்வார். பின்னர் அந்த வாக்காளரின் அனுமதி பெற்று பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். கூடுதல் பெயர் பதிவுகளை நீக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்தாலும், ஒவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பங்களை இதில் பயன்படுத்துகிறோம். தற்போது வாக்காளரின் சம்மதம் பெற்ற பிறகே பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments