திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருகை 17 சதவீதம் அதிகரிப்பு




திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வருகை 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய முனையம்

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கடந்த ஜூன் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய முனையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் திருச்சி விமான நிலையத்தினை பயன்படுத்தும் வெளிநாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு சேவை

இதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளையும் இண்டிகோ நிறுவனம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமான சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் உள்நாட்டு விமான சேவைகளை 45 ஆயிரத்து 529 பேர் பயன்படுத்தி உள்ளனர். இது கடந்த ஜூன் மாதத்தை விட 26.6 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோன்று வெளிநாட்டு விமான சேவைகளை 1 லட்சத்து 16 ஆயிரத்து 636 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இது கடந்த ஜூன் மாதத்தை விட 13.8 சதவீதம் அதிகம் ஆகும்.

17.1 சதவீதம் அதிகரிப்பு

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவைகளை மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 165 பேர் பயன்படுத்தி உள்ளனர். இது கடந்த ஜூன் மாதத்தை விட 17.1 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments