திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 பெட்டிகள் திடீரென கழன்றதால் பரபரப்பு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்




திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 பெட்டிகள் திடீரென கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரெயில் பெட்டிகள் கழன்றது

ராமேசுவரம் மண்டபம் முதல் சென்னை எழும்பூர் வரை சேது எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி சேவையாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் இரவு 8.50 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 1.25 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்து சேரும். பின்னர் திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். அதன்படி நேற்று முன்தினம் இரவு மண்டபத்தில் இருந்து என்ஜின் உள்பட 22 பெட்டிகளுடன் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

இந்த ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை 1.25 மணிக்கு முதலாவது நடைமேடைக்கு வந்தது. அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தொலைவில் சென்றபோது, ரெயிலின் பின்புறத்தில் இருந்த முன்பதிவு பெட்டியான எஸ்2-எஸ்1 இடையே இணைப்பு சங்கிலியின் ‘ஸ்குரூ’ திடீரென உடைந்தது. இதனால் எஸ்1 பெட்டி மற்றும் அதன்பின் இருந்த 2 முன்பதிவில்லா பெட்டிகள் கழன்று நின்றன. அந்த பெட்டிகளில் சுமார் 200 பயணிகள் இருந்தனர்.

40 நிமிடம் தாமதம்

அதேநேரம் மற்ற பெட்டிகளுடன் அந்த ரெயில் சில அடி தூரம் சென்று கொண்டிருந்தது. மேலும், பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இது நடந்ததால் அந்த ரெயில் மிகவும் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பெட்டிகளிலும் இருந்த பயணிகள் பெட்டிகளில் இருந்து கீழே இறங்கி கூச்சலிட்டனர். இதை பார்த்த கார்டு கொடுத்த தகவலையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரெயில் மெதுவாக சென்றபோது, பெட்டிகள் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது இணைப்பு சங்கிலியின் ‘ஸ்குரூ கப்ளிங்ஸ்’ உடைந்து இருந்ததை கண்டு உடனடியாக மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் சங்கிலியை புதிதாக மாற்றி பெட்டிகளை இணைத்தனர். இதனால் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 40 நிமிடம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments