பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் வெற்றிகரமாக நடந்தது: தூக்குப்பாலத்தை 15 மீட்டர் உயரம் வரை திறந்து சோதனை பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்




பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலத்தை 15 மீட்டர் உயரம் வரை திறந்து நடந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததால் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.

தூக்குப்பாலத்தை திறந்து சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் 77 மீட்டர் நீளமும், சுமார் 650 டன் மொத்த எடையுடன், செங்குத்தாக வந்து திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மேலும், கீழுமாக லிப்ட் போன்று சென்றுவரும் பகுதி மட்டும் 110 டன் எடை கொண்டதாகும்.

இந்த தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்கான மின் இணைப்பு சாதனங்களை ெபாருத்தும் பணி மற்றும் தூக்குப்பாலத்தின் 4 பகுதிகளிலும் ஒரே சீரான எடையை கொண்டு வருவதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பாம்பன் தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்கான சோதனை நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மின்சாரத்தில் இயங்கும் இந்த தூக்குப்பாலமானது முதலில் ஒரு அடி உயரத்திற்கு மேலே தூக்கி திறக்கப்பட்டது. தொடர்ந்து 2 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் மீண்டும் இறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதும் அங்கு இருந்த ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

15 மீட்டர் உயரம்

நேற்று மாலை 5 மணி அளவில் மீண்டும் அடுத்தக்கட்ட சோதனை நடந்தது. இதற்காக தூக்குப்பாலத்தில் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. இந்த சோதனையானது தூக்குப்பாலத்தை ஓரளவுக்கு திறக்கும் வகையில் நடைபெற்றது.

இரவு 7 மணி வரையிலும் நடந்த இந்த சோதனையின்போது, சுமார் 15 மீட்டர் உயரத்திற்குமேல் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. அப்போது பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். ஏராளமானவர்கள் பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி இதனை ஆர்வமாக பார்த்து ரசித்தனர். கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏராளமானோர் இந்த காட்சியுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

அடுத்தகட்ட சோதனை

இதுகுறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இன்றைய சோதனையின்போது தூக்குப்பாலம் சுமார் 15 மீட்டர் உயரம் வரையிலும் திறக்கப்பட்டு இருக்கிறது. அடுத்தக்கட்டமாக 28 மீட்டர் உயரம் வரையிலும் தூக்குப்பாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெற உள்ளது.

அதன்பின்பு விரைவில் ெரயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி சான்றிதழ் வழங்கிய பின்னர் புதிய ரெயில் பாலத்தில் ெரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments