அறந்தாங்கி அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி கிராமமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு




அறந்தாங்கி அருகே வேட்டனூரில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், வேட்டனூர் சாலை நாகுடியில் இருந்து மாணவநல்லூர், வேட்டனூர், நிலையூர், செல்லப்பன் கோட்டை, பானாவயல், தண்டலை வழியாக மணமேல்குடி வரை சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் தினம்தோறும் அறந்தாங்கி, நாகுடி, மணமேல்குடி வரை 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கும், பொதுமக்களும் சென்று வருகிறார்கள்.

இந்த சாலையில் வேட்டனூர் கிராமத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி வேட்டனூர் கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுநாள் வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த வேட்டனூர் கிராமமக்கள் சாலையை சீரமைக்கக்கோரி நேற்று அறந்தாங்கி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், தாசில்தார், அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் நாகுடி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விரைவில் வேட்டனூர் சாலையை சீரமைக்க வில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவதாக கிராமமக்கள் கூறிவிட்டு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments