முறைகேடாக பட்டா வழங்கிய விவகாரம்: பொய்யான தகவல்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தாசில்தார் மீது நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு




முறைகேடாக பட்டா வழங்கிய விவகாரத்தில் பொய்யான  தகவல்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பட்டா வழங்கிய விவகாரம்

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி தெற்குதெருவைச் சேர்ந்த மணி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

என் தந்தையின் மறைவுக்கு பின்பு பள்ளபட்டியில் உள்ள அவரது சொத்துகளை நான் அனுபவித்து வருகிறேன். இந்த நிலத்தில் எனக்கும், என் தம்பிக்கும் சம உரிமை உள்ளது. அவர் பெங்களூருவில் உள்ளதால், அந்த நிலத்தை நான் பராமரித்து வருகிறேன். இந்த சொத்துகள் பாகப் பிரிவினை செய்யப்படவில்லை. ஆனால் என் தம்பி, பாகப்பிரிவினை செய்யாத நிலத்தில் கண்டதில் சரிபாதி என குறிப்பிட்டு வேறு நபர்களுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இந்த கிரைய ஆவணத்தில் நீளம், அகலம் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. கிரையம் செய்த நபர் பெயரில் பட்டா வழங்குவதற்கு உட்பிரிவு செய்ய நான் ஆட்சேபம் ெதரிவித்தேன். ஆனால், அதிகாரிகள் அவருடன் சமரசமாக செல்லுமாறு என்னை வற்புறுத்துகின்றனர். இது தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கில் பட்டா மாறுதலுக்கு உட்பிரிவு செய்யக் கூடாது என உத்தரவானது. ஆனால், முன்தேதியிட்டு பட்டா உட்பிரிவு செய்தது போல ஆவணம் தயாரித்து, பட்டா கொடுத்துள்ளனர். இது சட்டத்திற்கும், கோர்ட்டு உத்தரவுக்கும் எதிரானது.

எனவே, பட்டா உட்பிரிவு செய்த உத்தரவையும், பட்டாவையும் ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஒரு அரசு ஊழியர் சட்டத்தின் ஆட்சியை மதிக்காதவர்களுடன் இணைந்து ஆவணங்களை திருத்துவது மட்டுமின்றி, நடைமுறைகளையும் எவ்வாறெல்லாம் கையாள முடியும் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணமாகும்.

பொய் சாட்சி

இந்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை பார்க்கும்போது, நிலக்கோட்டை தாசில்தார் சார்பில் இந்த கோர்ட்டில் தவறான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, பொய் சாட்சியம் அளிக்க முயன்றதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை தொடங்கும் போதே பொய்யான குற்றச்சாட்டுக்கு போதுமான முகாந்திரம் இருந்தால் அதில் திருப்தி கொள்ளலாம். இது தொடர்பான உத்தரவுகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன, இந்த உத்தரவுகளை உருவாக்குவதில் தாசில்தாரின் பங்கு உள்ளிட்டவை நிரூபிக்கப்பட்டவை.

சட்டப்படியான அரசு பொது ஊழியர் ஒருவர் பொது நீதிக்கு எதிராக ஆவணங்களை ெகாடுப்பதும் சட்டப்படி தவறு தான்.

இந்த வழக்கில் தாசில்தார் தனது பிரமாண வாக்குமூலத்தில் பொய்யான தகவலை கூறியுள்ளார் என்பது நிரூபணமானது. அரசு பொது ஊழியரான அவர், தனது சட்டப்படியான கடமைகளில் இருந்து விலகி தனிநபர்களுக்காக நேர்மையின்றி செயல்பட்டுள்ளார். இதுபோன்ற செயல்களை கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. அவர், இந்த கோர்ட்டையும் தவறாக வழிநடத்த முயன்றுள்ளார்.

கோர்ட்டில் வழக்கு

எனவே மனுதாரர் நிலத்திற்கு பட்டா வழங்கியது மற்றும் உட்பிரிவு தொடர்பான அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது. நிலக்கோட்டை தாசில்தார் மீது திண்டுக்கல் கலெக்டர் உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் துணை பதிவாளர் ஒருவர் மூலம் மதுரை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை வருகிற 24-ந்தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments