மன்னார்வளைகுடாவில் உள்ள ராமேசுவரம் தீவை, ராமநாதபுரம் மாவட்டத்துடன் ரெயில் மூலம் இணைப்பதற்காக ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் பாம்பன் பாலம் கட்டப்பட்டது என்பது அறிந்ததே...!
பாம்பனில் பாலம் கட்டுவது என முடிவான பின்பு, அக்காலத்தில் நடந்த சுவாரசியங்களை யாரும் இப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவரை மண்டபத்தில் இருந்து, பாம்பன், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு படகு போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது.
1870-களிலேயே பாம் பாலம் திட்டம் குறித்த விவாதம் ஆங்கிலேயர்களிடம் மும்முரமாக நடந்து வந்தது, அதற்கு காரணம் இலங்கை உடனான வர்த்தகத்துக்கு பாம்பன் கடலில் ரெயில் பாலம் கட்டினால், தனுஷ்கோடி வரை சரக்குகளை ரெயிலில் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கை தலைமன்னாருக்கு கடல் வழி மார்க்கமாக சில மணி நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்ற கணக்குதான் இந்த பாலத்துக்கான கருவாக இருந்தது.
கடல் நடுவே என்பதால் பாம்பன் பால வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப காரணிகளை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்தனர். காரணம் அக்காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகள் கிடையாது.
மேலும் பிரிட்டனின் டே பாலம் மற்றும் ஓகியோவில் உள்ள அஸ்தபுலா பாலம் இடிந்து சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்து இருந்தன.
பாம்பன் பாலம் பணியில் 600-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போதயை திட்ட மதிப்பீட்டில் ரூ.2 மில்லியன் (ரூ.20 லட்சம்) செலவிடப்பட்டது. 10 அடி ஆழத்துக்கு நீருக்கு அடியில் தரையில் துளையிடப்பட்டு பாலத்தின் தூண்கள் கட்டப்பட்டன. இதற்கு சுமார் 5 ஆயிரம் டன் சிமெண்டு, 18 ஆயிரம் கன அடி ஜல்லி கற்கள், 2,600 டன் இரும்பு, 80 ஆயிரம் கன அடி பாறை கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 145 இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
கப்பல் வரும் போது திறப்பதற்காக 225 அடி நீளத்தில் பாலத்தின் மையப்பகுதி (தூக்குப்பாலம்) வடிவமைக்கப்பட்டு உள்ளது. திறந்து மூட வசதியாக இது 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவும் 415 டன் எடை கொண்டது. இதுதான் ஸ்கெரச்சர் ஸ்பான் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் தூக்குப்பாலத்தை திறப்பதற்கு 6 பேர் பணியில் இருந்தனர். சரியாக சொல்வது என்றால், 1911-ல் பாலம் கட்டும் பணிகள் தொடங்கி 24.1.1914-ல் ரெயில் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.
இந்தியாவில் கடலின் நடுவே சுதந்திரத்துக்கு முன்னதாக கட்டப்பட்ட முதல் பாலம் என்ற பெருமையை பாம்பன் பாலம் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியில் இந்த பாலம் அமைந்துள்ளது. அதாவது அதிக காற்றழுத்தம் மற்றும் புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதியில் இந்த பாலம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லண்டனில் இருந்து வெளிவரும் என்ஜினீயர் என்ற இதழில் 1914-ம் ஆண்டு திறனாய்வு செய்து கட்டுரையும் வெளிவந்தது. அதில், பாலம் குறித்த தொழில்நுட்ப தகவல்கள் பல்வேறு முனைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது.
1914-ம் ஆண்டு முதல் சுமார் நூற்றாண்டுகளை கடந்து ஒரு ரெயில்வே பாலம், கடல் நடுவே உள்ள தீவை இணைத்து மக்களுக்கு பெரும்பங்காற்றி வந்தது. அதற்கு முன்பெல்லாம் புண்ணியதலமான ராமேசுவரத்திற்கு செல்ல படகுகளில் அதிக சிரமம் எடுத்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அதன்பிறகு ராமேசுவரத்துக்கு சென்றவர்கள், பாம்பன் பாலத்தையும் ரசித்து வந்தார்கள் என்றால் அது மிகையாகாது. அனைத்து வயதினரும் மகிழ்ச்சியடையும் வகையிலான 2 கி.மீ. கடலுக்கு நடுவே பயணம்.
மதுரையில் இருந்து ரூ.35 கட்டணத்தில் பாம்பன் பாலத்தை கண்டு ரசிக்க ரெயில் வசதி இருந்தது. தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பாலம் கடலின் மேற்பரப்பில் இருந்து உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் பழைய பாலத்தில் சென்று ரசித்த அனுபவத்தை மீண்டும் பெற முடியுமா? என்பது சந்தேகமே. பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்தை நிறுத்துவதற்கு முன்னர் வரை, அதாவது 22.12.2022-க்கு முன்பு வரை 6 பாசஞ்சர் ரெயில்கள், 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 12 சூப்பர்பாஸ்ட் ரெயில்கள் மற்றும் ஒரு சிறப்பு ரெயில் என 31 ரெயில்கள் பாம்பன் பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாலத்தை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் ஏராளமான சிறியரக கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. இதில், 1500 டன் எடை கொண்ட மிதவை கப்பல்தான் இந்த பாலத்தை கடந்ததில் பெரிய கப்பலாகும்.
1988-ம் ஆண்டு வரை ராமேசுவரம் தீவை இணைக்க ஒரே போக்குவரத்து வழித்தடமாக பாம்பன் ரெயில் பாலம் மட்டுமே இருந்தது. அதன் பின்னரே, சாலைப்போக்குவரத்துக்கான பாலம் கட்டப்பட்டது. பாம்பன் ரெயில் பாலம் 1964-ம் ஆண்டு புயலில் லேசாக சேதமடைந்தது. 1914-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் தண்டவாளங்கள் பொருத்தப்பட்ட பாலமாக இருந்தது. பின்னர் 2007-ம் ஆண்டுக்கு பின்னர் 5 அடி 6 அங்குலம் கொண்ட அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. 450 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த 2009-ம் ஆண்டு பாலத்தின் வலிமை குறைந்து விடாமல் இருப்பதற்கான பணிகள், மதுரை கோட்ட ரெயில்வேயால் மேற்கொள்ளப்பட்டன. இழுவைக்கப்பல் ஒன்று பாம்பன் பாலத்தை கடக்கும் போது ஏற்பட்ட சேதத்தால், 13.1.2013-ல் பாலத்தின் தூண்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2016-ல் பாலத்தை சீரமைக்க மத்திய அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
அதாவது, தூக்குப்பாலத்தை சீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலங்களின் இணைப்பில் ஒரு பகுதியில் அதிக சத்தம் வரத்தொடங்கியதை தொடர்ந்து, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த பழுது சரி செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பாலம் வலுவிழந்து கொண்டிருப்பதை இது போன்ற தொடர்ச்சியான பழுதுகள் உணர்த்தி கொண்டே இருந்தன. எனவே, பழைய பாலத்திற்கு அருகிலேயே நவீன தொழில்நுட்பத்துடன் புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாம்பன் புதிய பாலம் கட்டப்பட்டு, திறப்பு விழாவை எதிர்நோக்கி இருக்கிறது. 18.3 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மத்தியில் இருபுறங்களையும் இணைத்து லிப்ட் போல மேலே செல்லும் வகையில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இரட்டை ரெயில் பாதை அமையும் வகையில் தூண்கள் அகலமாக கட்டப்பட்டுள்ளன. கடல் மண் பரிசோதனையின் அடிப்படையில் 1.5 மீட்டர் சுற்றளவுள்ள குவியல் முறை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 72.5 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட டவர்களை கொண்டு செங்குத்தாக உயர்த்தும் மெகா லிப்ட்கள் உள்ளன. புதிய பாலத்தை சாலை போக்குவரத்து பாலத்துக்கு இணையான உயரம் கொண்டது.. இதன் மூலம் பெரிய கப்பல்களும் பாம்பன் பாலத்தை கடந்து செல்ல முடியும். இதற்காக கடலுக்கு நடுவில் 35 மீட்டர் ஆழத்திற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, தூண்கள் கட்டப்பட்டுள்ளன.
முற்காலத்தில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கு இடையே 150 கடல் மைல் தொலைவுக்கு நீராவிக்கப்பல் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் மண்டபம்-பாம்பன் இடையே கடலுக்கு நடுவே ரெயில் பாலம் கட்டப்பட்ட அதே வேளையில், இலங்கையில், கொழும்புவில் இருந்து தலைமன்னார்வரை ரெயில் போக்குவரத்துக்கான வசதிகள் செய்யப்பட்டன. எனவே கொழும்புவை சரக்குகள் சென்றடைய இருந்த கடல் வழி தூரம் 22 மைல்களாக குறைந்தது. அதற்கு சிறிய கப்பல்களை இயக்கி, இங்கிருந்து வேகமாக நகர்த்தினர். அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது பாம்பன் பாலம் என்றால் அது மிகையல்ல.
இந்த பாலத்தை வடிவமைத்தவர் ஜெர்மனியை சேர்ந்த என்ஜினீயர் வில்லியம் ஸ்கெர்ச்சர். இதற்கான ஆலோசனைகளை லண்டனை சேர்ந்த என்ஜினீயர் ராபர்ட் வைட் வழங்கினார். தோர்னபி-ஆன்-டீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ரைட்சன் நிறுவன என்ஜினீயர் லார்சனின் ஆகியோரின் மேற்பார்வையில் பணிகள் நடந்தன.
2022-ம் ஆண்டுடன் சேவையை நிறுத்திக்கொண்ட பாம்பன் பாலத்தின் நடுப்பகுதியை பாரம்பரிய சின்னமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்த பாலத்தின் அமைப்பானது, உள்ளது உள்ளபடியே நகர்த்தி கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப அடிப்படையில், இதனை பிரித்தால் தனித்தனி கம்பிகளாக வந்து விடும் நிலை உள்ளது. ஆனால், கடலின் நடுப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான டன் எடையளவு கொண்ட பகுதியை எவ்வாறு சேதமின்றி கொண்டு வருவது என்பதில் பெரும் குழப்பம், சற்று சிக்கலும் நீடிக்கிறது. இதற்காக ரெயில்வே அமைச்சகமும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. எப்படியிருப்பினும் நடுக்கடல் வரை உள்ள ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை கட்டாயம் பிரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. பாம்பன் பாலம் என்பது வருங்கால சந்ததியினர் போற்றி பாதுகாக்க வேண்டிய பாரம்பரிய சின்னம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.