அதிராம்பட்டினத்தில் பிளஸ்-2 மாணவியின் கை விரல்களில் 15 முறை ஏறி, இறங்கிய 4 சக்கர வாகனங்கள் உலக சாதனை முயற்சிக்காக துணிச்சலுடன் களம் இறங்கினார்




தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிளஸ்-2 மாணவியின் கை விரல்களில் 15 முறை 4 சக்கர வாகனங்கள் ஏறி, இறங்கின. உலக சாதனை முயற்சிக்காக துணிச்சலுடன் களம் இறங்கிய மாணவியை பொதுமக்கள் பாராட்டினர்.

12-ம் வகுப்பு மாணவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவருடைய மனைவி அன்பரசி. இவர்களுடைய மகள் சுசிஷாலினி(வயது16). இவர் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி சுசிஷாலினி கடந்த சில ஆண்டுகளாக தனது உடன் பிறந்த சகோதரரும், கராத்தே மாஸ்டருமான குலாஸ்டாலினிடம் கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இவர் கார், ஜீப் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக 15 முறை தனது கை விரல்களில் ஏற்றி உலக சாதனை படைக்க முயற்சி மேற்கொண்டார். இதற்கான நிகழ்ச்சி நேற்று அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் நடந்தது. தொடர்ச்சியாக 15 முறை மாணவி சுசிஷாலினியின் விரல்களில் கார், ஜீப் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் ஏறி இறங்கியதை ஏராளமான மக்கள் கண்டு வியந்தனர்.

உலக சாதனை முயற்சிக்காக துணிச்சலுடன் களம் இறங்கிய அவரை கராத்தே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர்.

தோள்களில் தூக்கி உற்சாகம்

மன உறுதியுடன் கை விரல்களில் 4 சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்ட மாணவிக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், போலீசார், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இந்த முயற்சிக்காக அவருக்கு சான்றிதழும், ஷீல்டும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கராத்தே மாணவர்கள் மாணவி சுசிஷாலினியை தங்களுடைய தோள்களில் தூக்கி உற்சாகப்படுத்தினர்.

இது குறித்து மாணவி சுசிஷாலினி கூறுகையில், சிறு வயதில் இருந்தே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கராத்தே பயிற்சி மேற்கொண்டேன்.

வயிற்றில் இருசக்கர வாகனம்

உலக சாதனை முயற்சியாக எனது கை விரல்களில் 4 சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக 15 முறை ஏற்றி உள்ளேன். நான் இதற்கு முன்பு கடந்த ஆண்டு எனது வயிற்றில் மரப்பலகையை வைத்து 67 முறை இருசக்கர வாகனத்தை ஏற்றி சாதனை படைத்துள்ளேன்’ என்றார்.

நிகழ்ச்சியில் நகரசபை துணைத் தலைவர் ராம.குணசேகரன், டாக்டர் மதிவாணன், மங்கனங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியவாணி, கேரளா கராத்தே பயிற்சியாளர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments