பதவிகாலம் அடுத்த மாதம் 5-ந்தேதி முடிவடைகிறது ஊரக உள்ளாட்சிகளுக்கு உடனடி தேர்தல் இல்லை தனி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு திட்டம்
ஊரக உள்ளாட்சி அமைப்பில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அந்த பதவிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. எனவே தனி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு
உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் தான் மத்திய அரசும், அதற்கான மானியங்களை விடுவிக்கும். அதேபோல் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தான் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிணைந்து முழுமையாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் பதவி காலம் 2016-ம் ஆண்டு முடிந்தது. அதன்பின் தேர்தல் நடத்தப்பட வில்லை. தனி அலுவலர்கள் மூலம் உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டன.
91 ஆயிரம் பதவிகள்
2019-ம் ஆண்டு காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ந்தேதி என 2 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் மூலம் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடந்தன.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பொறுப்பேற்றனர். இவர்களது பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதியுடன் முடிவடைகிறது.
உடனடியாக தேர்தல் இல்லை
பதவி காலம் முடிவடையும் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், மாநில தேர்தல் ஆணையத்தால் 45 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். அதற்கான வாக்காளர் பட்டியலும் வெளியிட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. அதற்கு போதிய காலமும் இப்போது இல்லை. எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
தனி அதிகாரிகளை நியமிக்க திட்டம்
எனவே பதவி காலம் முடியும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு, சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் தமிழக சட்டசபை 6-ந்தேதி தொடங்குகிறது. எனவே அதற்கு முன் தினமான 5-ந் தேதி, பதவி முடிவடையும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. தற்போது நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டுள்ளதால் 28 மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
எனவே தனி அலுவலர்களை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை 4-ந்தேதி அல்லது 5-ந்தேதி கொண்டு வரவேண்டும். எனவே இது குறித்து எப்போது வேண்டுமானாலும், அறிவிப்பு வெளியிடப்படலாம்.
இந்த சட்டத்தின்படி, கிராம பஞ்சாயத்துக்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (கிராம ஊராட்சி) மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நிர்வாகம் செய்வார்கள்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை 2 பகுதியாக பிரித்து, ஒரு பகுதியை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), மற்றொரு பகுதியை உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகியோரும் நிர்வாகம் செய்வார்கள்.
மாவட்ட ஊராட்சியை அந்த மாவட்டத்தில் உள்ள திட்ட அலுவலர் அல்லது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) நிர்வாகம் செய்வார்கள்.
பணப்பரிமாற்றம் கண்காணிப்பு
உள்ளாட்சிகளில் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு மட்டுமே காசோலை அதிகாரம் உள்ளது. எனவே அவர்கள் செய்யும் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்போதே கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 5-ந் தேதிக்கு பிறகு எந்த பரிமாற்றமும் செய்ய முடியாது.
அவசர சட்டம் கொண்டு வரப்பட்டாலும், இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் இதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.