புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வினியோகம் டோக்கன் வரிசைப்படி பொதுமக்கள் பெறலாம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் வினியோகிக்கப்பட உள்ளது. டோக்கன் வரிசைப்படி பொதுமக்கள் பெறலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பு

தைத்திருநாளாம், பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான பச்சரிசி, சர்க்கரை மூட்டைகள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தயாராக உள்ளன. மேலும் முழு நீளக்கரும்பும் விவசாயிகளிடம் அரசின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு தேவைக்கேற்ப ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் வினியோகம்

பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெறும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அந்த டோக்கனில் தேதி, நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரிசைப்படி நாளில் ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் வினியோகிக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,078 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 891 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அந்தந்த ரேஷன் கடைகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக டோக்கன் அடிப்படையில் 100, 200 எண்ணிக்கையில் மக்களை வரவழைத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை பெற மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

வேட்டி-சேலை

பொங்கல் பரிசு தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது. இதற்காக விலையில்லா வேட்டி, சேலைகள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. புதுக்கோட்டையில் மாநகர பகுதியில் ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் வேட்டி, சேலை பண்டல்கள் வந்திறங்கின.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments