புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தன எம்.எல்.ஏ. அலுவலகங்கள் `சீல்' வைப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தன. மேலும் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் `சீல்' வைக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிக்கை நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்தம் மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அறையின் முன்பு மாவட்ட தேர்தல் அலுவலர் என்ற ஸ்டிக்கர் உடனடியாக ஒட்டப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தயார் நிலையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சியினரால் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களின் மீது சுண்ணாம்பு அடித்து அழிக்கப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ. அலுவலகங்கள் `சீல்’ வைப்பு

இதனையடுத்து நேற்று மாலை புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தை பூட்டி `சீல்' வைக்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் சாதனை விளக்க பேனர்கள், பதாகைகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்துதல் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை அலுவலகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது.

விராலிமலையில் அரசு அலுவலகங்களில் உள்ள கட்சி தலைவர் புகைப்படங்கள் அகற்றப்பட்டது. மேலும் விராலிமலை சட்டமன்ற அலுவலகத்தை விராலிமலை தாசில்தார் ஜெயபாரதி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பூட்டி `சீல்' வைத்தனர்.

திருமயம், கந்தர்வகோட்டையில் எம்.எல்.ஏ அலுவலங்களை அதிகாரிகள் பூட்டி `சீல்' வைத்தனர். ஆலங்குடி சட்டமன்ற அலுவலகத்தை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சோபா தலைமையில் அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments