புதுக்கோட்டை அருகே பயங்கரம்: திருமணம் செய்து கொடுக்க மறுப்பு மகளை கடத்த முயன்றதை தடுத்த தாய் வெட்டிக்கொலை பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது



புதுக்கோட்டை அருகே மகளை கடத்த முயன்றவர்களை தடுத்த தாய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமணம் செய்து கொடுக்க மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே வடக்கிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி காளியம்மாள் (வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுரேஷ் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த விஜயலெட்சுமி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து மேல்மருவத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். அவருடன் விஜயலெட்சுமியின் தம்பி விவின் (32) என்பவரும் உள்ளார்.

இந்தநிலையில் விவின் காளியம்மாளிடம் அவரது 2-வது மகளை திருமணம் செய்து தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்கு காளியம்மாள் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

தாய் வெட்டிக்கொலை

நேற்று அதிகாலை 3 மணியளவில் காளியம்மாள் வீட்டுக்கு காரில் விவின் மற்றும் அவருடன் 3 பேர் கொண்ட கும்பல் வந்தனர். பின்னர் அவர்கள் காளியம்மாளிடம் பெண் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் காளியம்மாளின் மகளை கடத்திச்செல்ல முயன்றனர். இதனை காளியம்மாள் தடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த விவின் மற்றும் அவருடன் வந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காளியம்மாளை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த காளியம்மாள் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளியம்மாளின் உடலை பார்த்து அவரது மகள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்களையும் கண்கலங்க செய்தது.

4 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீசார் குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர். இதையடுத்து விவின் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த சதீஷ்குமார் (37), தினேஷ் (18), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து வடகாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜனதா பிரமுகர்

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், விவின் செங்கல்பட்டில் பா.ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பின் மாவட்ட தலைவராக இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். வடகாடு அருகே மகளை கடத்த முயன்றவர்களை தடுக்க முயன்ற தாய் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments