கடல் வளத்தைக் காத்த அம்மாபட்டினம் மீனவர்கள்: வலையில் சிக்கிய ஆமை பத்திரமாக கடலில் விடுவிப்பு!



புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கடற்பகுதியில் வலையில் சிக்கிய அரிய வகை ராட்சத கடல் ஆமையை, மீனவர்கள் பத்திரமாக மீண்டும் கடலில் விட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

​அம்மாபட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரூபன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், அவற்றுடன் குழந்தைசாமி மற்றும் அப்துல்லா ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் மீன்பிடி வலையில் வழக்கத்திற்கு மாறாக பலத்த எடை கொண்ட ஒரு உயிரினம் சிக்கியது.

​வலையை மேலே இழுத்துப் பார்த்தபோது, அதில் சுமார் 15 கிலோ எடை கொண்ட ராட்சத கடல் ஆமை ஒன்று சிக்கியிருப்பது தெரியவந்தது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி கடல் ஆமைகள் பிடிப்பதற்கும், வைத்திருப்பதற்கும் தடை செய்யப்பட்ட அரிய வகை உயிரினம் என்பதை உணர்ந்த மீனவர்கள், சற்றும் தாமதிக்காமல் ஒருமனதாக ஒரு நெகிழ்ச்சியான முடிவை எடுத்தனர்.

​வலையில் சிக்கிய ஆமைக்கு எந்தவித காயமும் ஏற்படாதவாறு, மிகுந்த எச்சரிக்கையுடன் அதனை மீட்டனர். பின்னர், நடுக்கடலிலேயே அதனை மீண்டும் பத்திரமாக தண்ணீரில் விடுவித்தனர். கடலுக்குள் ஆமை நீந்திச் சென்றதைக் கண்ட மீனவர்கள் நிம்மதியடைந்தனர்.

​சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அரிய வகை கடல் வாழ் உயிரினத்தைக் காப்பாற்றிய மீனவர்கள் ரூபன், குழந்தைசாமி மற்றும் அப்துல்லா ஆகியோரின் இந்தச் செயலை அப்பகுதி பொதுமக்களும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். கடல் வளத்தைப் பாதுகாப்பதில் மீனவர்களின் இத்தகைய பொறுப்புணர்வு மற்றவர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments