மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம்.ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக் கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம். நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.


மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.இவை இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.

மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.

மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை.வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு,சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.

மேலும் மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

ஒரு சிலரது உடல் மிகவும் நோஞ்சானாக காணப்படும்.இத்தகையவர்களுக்கு மாம்பழம் கொடுக்க, வேறு எந்த உணவும் செய்யாத மாய வித்தையை மாம்பழம் செய்து, அவர்களை கொழு கொழு உடலோடு புஷ்டியாக ஆக்கிவிடும்.ஏனெனில் இதில் ஏராளமான கலோரிகள் மற்றும் ஹார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன.

அத்துடன் சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தை கூட மாம்பழம் தடுத்துவிடுகிறது என்கிறது ஒரு ஆய்வு.

சீன மருத்துவத்தில் மாமபழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய சக்தியாக கருதப்படுகிறது. ரத்த சோகை, ஈறுகளில் ரத்தம் வடிதல், இருமல், காய்ச்சல், குமட்டல் மற்றும் கடல் ஒவ்வாமை நோய் போன்றவற்றிற்கு மாம்பழத்தை பரிந்துரைக்கிறது சீன மருத்துவம்.

தேர்வு காலங்களில் படிக்கும் குழந்தைகள், தூக்கம் வராமல் இருப்பதற்காக சிப்ஸ், மிக்சர் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை கொறிப்பார்கள். அவர்கள் இத்தகைய உணவுகளுக்குப் பதிலாக மாம்பழத் துண்டுகளை சாப்பிட அதிலிருக்கும் குளுடாமின் அமிலம்,கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.

இவையெல்லாவற்றையும் விட காரணமே இல்லாமல் கூட மாம்பழத்தை அதன் சுவைக்காக சாப்பிடலாம்.ஏனெனில் மாம்பழம் எல்லா நேரமும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே என்பதால் கிடைக்கும்போது சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அது கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்காத மாம்பழம் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்!

Post a Comment

0 Comments