உயிரைப் பறித்த சீன மொபைல்




குஜராத் மாநிலத்தில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்த தஞ்சி தாமூர் என்ற பெயர் கொண்ட 25 வயது வாலிபர், சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்துள்ளார்.
மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த சீனாவில் இருந்து இறக்குமதியான மொபைல் ஒன்றை சார்ஜ் செய்தவாறு பேசுகையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிக வோல்டேஜ் அளவில் உடம்பில் மின்சாரம் பாய்ந்து உயிரைப் பறித்ததாக, இவரின் உடம்பினைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



போன்களை அடையாளம் காட்டும் தனி எண்கள் இல்லாத மொபைல் போன்களுக்கு இந்திய அரசு தடை விதித்த பின்னரும், மலிவான சீன போன்கள் இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பல வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில் இவை கிடைப்பதால், இவற்றைப் பெரும்பாலான மக்கள், குறிப்பாக கிராமப் புற மக்கள், வாங்கிப் பயன்படுத்துகின்றனர். எந்த தர அடிப்படைக்கும் ஏற்றதாக இந்த போன்கள் இருப்பதில்லை.

சீனாவில் ஆயிரக்கணக்கானோர் இது போன்ற போன்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷான்ஷாய் போன்கள் எனப் பொதுவாக இவற்றை அழைக்கின்றனர். பிரபல நிறுவனங்களின் போன்கள் போல இந்த போன்கள் தயாரிக்கப்படுவதால், ஆங்கிலம் தெரியாத பலர் இதனால் ஏமாற்றப் படுகின்றனர்.

இந்த போன்களைத் தயாரிக்கும் போதே, சில கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களும் பதிந்தே அனுப்பப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, சீன அரசு இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. சென்ற ஆண்டு இதே போல ஒரு பெண், சீன மொபைல் போனால் மின்சாரம் தாக்கி இறந்தது நினைவிருக்கலாம்.

Post a Comment

0 Comments