கோபாலப்பட்டிணத்தில் சிறுமியைக் கடத்தி கற்பழித்த வாலிபர் திருமணத்துக்கு மறுத்ததால் தாய் புகார்..!வீட்டில் வேலை பார்த்து வந்த, 14 வயது சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்த பின்னர், திருமணம் செய்ய மறுத்த வாலிபர் உட்பட, ஐந்து பேரை மகளிர் போலீஸார் தேடிவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோபாலபட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது இலியாஸ், 55. இவரது வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த பரக்கத் நிஷா, அவரது, 14 வயது மகள் வீட்டு வேலை பார்த்துவந்தனர்.
கடந்தாண்டு அக்டோபர், 17ம் தேதி முகம்மது இலியாஸ் வீட்டில், வேலைக்குச் சென்ற சிறுமியை, அவரது மகன் பைஸல், 23, அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு பைக்கில் கடத்திச்சென்றுள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.

இதற்கு சிறுமி உடன்பட மறுக்கவே, அவரது இரண்டு கைகளையும் கயிறால் கட்டிய பின் பலவந்தமாக கற்பழித்துள்ளார்.வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இருந்தும் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை, தாயிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த பரக்கத் நிஷா, இதுகுறித்து வீட்டு உரிமையாளர் முகம்மது இலியாஸிடம் கூறி உள்ளார்.

தாய் மற்றும் மகளை சமாதானம் செய்த முகம்மது இலியாஸ், தன் மகனுக்கு சிறுமியை ஒரு மாதத்துக்குள் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதை நம்பிய பரக்கத் நிஷா, வீட்டு உரிமையாளரின் மகனால், தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் மறைத்துள்ளார். ஒரு மாதம் கடந்தும் திருமணத்துக்கான ஏற்பாடு செய்யாததால், ஏமாற்றமடைந்த பரக்கத் நிஷா, ஊர் பஞ்சாயத்தாரிடம் முறையிட்டுள்ளார்.

இருதரப்பையும் அழைத்து விசாரித்த பஞ்சாயத்தார், சிறுமியை திருமணம் செய்துகொள்ள பைஸல் மறுப்பதால் அவர்களிடமிருந்து, பணம் பெற்றுக்கொண்டு, மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பரக்கத் நிஷா, சைல்டு லைன் உதவியை நாடியுள்ளார். அவர்களது அறிவுரையின் பேரில் கற்பழிக்கப்பட்ட, தன் மகளுடன் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் கொடுத்துள்ளார்.

சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்ததோடு, திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் பைஸல், உடந்தையாக இருந்த அவரது தந்தை முகம்மது இலியாஸ், பஞ்சாயத்தார் செய்யது முகம்மது, ஜகுஃபர் சாதிக், காதர்பாட்ஷா, நைனா முகம்மது ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மகளிர் போலீஸார், அவர்களை தேடிவருகின்றனர்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=892182&Print=1

Post a Comment

0 Comments