மீமிசலில் காடுபோல் மாறிய ஆற்று முகத்துவாரம்



மீமிசலில் பாம்பாறு கடலில் இணையும் முகத்துவார பகுதியில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு புதர்கள் மண்டியும், முகத்துவார பகுதி மேடாகவும் மாறியுள்ளது. இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் அப்பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் பாம்பாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. மற்ற ஆறுகளைப் போலவே இந்த ஆற்றில் இருந்தும் மணல் திருட்டு நடைபெற்றதால், தற்போது இந்த ஆற்றில் மண்ணில்லாமல் போய்விட்டது. இதனால் ஆற்றில் கருவேல மரங்கள், மாங்குரோவ் காடுகளில் வளரும் செடிகள் அதிகளவில் மண்டி ஆறு தெரியாத அளவில் உள்ளன.

இந்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய ஊரான மீமிசலில் பாம்பாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் அருகே ஆற்றில் கருவேல மரங்களும், செடிகளும் வளர்ந்து காடுபோல மாறியுள்ளன. இதனால் ஆற்றில் அடித்து வரப்படும் மணல், பழைய துணிகள், மரங்கள் போன்ற கழிவுகள் இந்த மரங்களின் அடிப்பகுதியில் தேங்கி, அந்த பகுதியே மேடாகி விட்டது. 

இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் அப்பகுதியில் தேங்கி, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்களை பரப்பி வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலத்தின் இருபுறமும் ஆற்றில் காடுபோல மரங்கள் வளர்ந்துள்ளதால், இரவு நேரத்தில் சிலர் கோழிக்கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது.

அடைமழை காலங்களில் மரங்களால் ஆற்றில் தண்ணீர் செல்ல தடை ஏற்படுவதால், தண்ணீர் பள்ளமான பகுதிக்குள் செல்லும் நிலையும் உள்ளது.  தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள் மணல் கொள்ளையால், காடுகள் போல மாறிவிட்டன. அதேபோலத்தான் மீமிசல் அருகே பாம்பாறும் மரங்கள் நிறைந்த காடாகவும், மண் மூடிய மேடாகவும் மாறிவிட்டது. 

இதனால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு பொதுக்கள் உள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து, மீமிசல் அருகே பாம்பாற்றில் வளர்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி, தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment