தேநீரக உரிமையாளரின் மனிதநேயம்: கஜா புயலால் பாதித்த விவசாயிகள், தொழிலாளர்களின் கடன்கள் தள்ளுபடி



"கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தோர் தேடி சென்று நிவாரண உதவிகள் அளித்தது ஒருவகையான நெகிழ்வாகக் கருதப்பட்ட நிலையில், தன்னுடைய கடையில் டீ குடித்த, வடை சாப்பிட்ட வகையில் விவசாயிகள், தொழிலாளர்கள் வைத்த கடன் தொகையைத் தள்ளுபடி செய்து தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள தேநீர் கடை உரிமையாளர்.

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. இந்த மாவட்டத்தில் ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, அறந்தாங்கி வட்டங்களில் மரங்கள், வீடுகள் சேதமடைந்து விவசாயம் முற்றிலும் அழிந்ததால் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது.

உரிய நிவாரணம், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், ஆலங்குடி அருகே வம்பன் நான்குச் சாலையில் தேநீர் கடை நடத்தி வரும் மாக்குனாம்பட்டியைச் சேர்ந்த எஸ். சிவக்குமார் (41),தனது கடையில் டீ குடித்த, வடை சாப்பிட்டவகையில் கடன் வைத்திருந்த விவசாயிகள், தொழிலாளிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

தேநீரகம் முன்பு அறிவிப்பு பதாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள், தொழிலாளர்களின் நிலையை அறிந்து, டிசம்பர் 18 ஆம் தேதி வரையில் இவரது கடையில் நிலுவையிலுள்ள ரூ.15,000-த்துக்கும் மேற்பட்ட கடன் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்து, அதற்கான அறிவிப்பு பதாகையையும் தொங்கவிட்டிருக்கிறார். இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். நிலம் இல்லாதவர்கள் விவசாயக் கூலிகளாகவும், கட்டுமானப் பணித் தொழிலாளர்களாகவும் பணியாற்று தங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கஜா புயலால் விவசாயமும் அழிந்துவிட்டது. வீடுகளும் இழந்துவிட்டனர். அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், கட்டுமானத் தொழிலும் தொழிலாளர்களுக்குத் தற்போது வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால், இப்பகுதி மக்கள் அன்றாட உணவுக்கு சிரமப்பட்டுவருகின்றனர். அதிலும், விவசாயக்கடன், நகைக்கடன், வாரவட்டிக்கு கடன் வழங்குபவர்களிடம் பெற்றுள்ள கடனுக்கான, வட்டிகளை திரும்ப செலுத்தமுடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்காளாகிவிட்டனர். எனது தேநீரகத்துக்கு டீ குடிக்க வரும் மக்கள் தங்கள் நிலையைச் சொல்லி வருந்துவதை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

அதனால், என்னால் முடிந்த வகையில், விவசாயிகள், தொழிலாளர்கள் எனது கடையில் வைத்திருந்த கடன் தொகையான ரூ.15,000-த்தை தள்ளுபடி செய்து விட்டேன் என்றார் சிவக்குமார்.

Post a Comment