2019-ல் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை வெளியீடு



2019-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

தேர்வர்கள் சரியான முறையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கான அட்டவணையை நேற்று முன்தினம் (டிசம்பர் 31) வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். உதவிப் பொது வழக்கறிஞர் கிரேடு-IIக்கான தேர்வு மற்றும் தமிழ்நாடு தடய அறிவியல் துறையிலுள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வு ஆகியன இந்த ஆண்டில் முதலாவதாக நடைபெறவுள்ளன. வரும் ஜனவரி 5ஆம் தேதி இத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.

2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட இருக்கும் தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகளும், 2019 ஆண்டு புதிதாக 29 தேர்வுகள் என மொத்தம் 52 தேர்வுகள் நடத்தப்படும்.

2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட இருக்கும் தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை


உதவி அரசு வழக்கறிஞர், தடய அறிவியல் துறையின் தொழில்நுட்ப ஆய்வாளர், உதவிசிறைக் கண்காணிப்பாளர், புள்ளியியல் பேராசிரியர்கள், தொல்லியல் துறை நூலகர், மாவட்டக் கல்வி அலுவலர், உப்பு ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத் துறை உதவிக்கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான 52 தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ளன.

தேர்வு நடத்தப்படும் முறை, பாடத்திட்ட விபரங்கள், விண்ணப்ப விவரங்கள், தேர்வு நாள் குறித்த விவரங்கள், இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அட்டவணையில் குறிப்பிட்டது போல் அல்லாமல், தேர்வு அறிவிப்பு வெளியாகும் மாதம் மாற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்குத் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment