திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து…தேர்தல் ஆணையம் அறிவிப்பு !



வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருந்தது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனால் தமிழக அரசியல் கடந்த ஒரு வாரமாக பெரிய பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில் திடீரென்று தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். அதேபோல் இந்த தேர்தலுக்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் குரல் கொடுத்தன.

கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. இந்த சேதத்தில் இருந்து மக்கள் இப்போதுதான் மீண்டும் வருகிறார்கள். மீட்பு பணிகள் இப்போதுதான் நடந்து வருகிறது. அதேபோல் 20 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ளது. எல்லா தொகுதிக்கும் சேர்த்துதான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இதற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திலும் மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மற்றும் புகார்களை அடுத்து திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்தார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி அரசியல் கட்சிகள், மக்கள் ஆகியோரிடம் ஆலோசனை செய்து நேற்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த நிலையில் தற்போது திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியல் பெரிய பரபரப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment