ஏ.டி.எம்-மில் பணம் இல்லை... எஸ்.பி.ஐ வங்கிக்கு அபராதம்



சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள ஒரு எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக, வேறொரு வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார். அவர் தனது கார்டை உள்ளே செலுத்தி பணம் எடுக்க முயன்றபோது `பணமில்லை' (No cash) என்று வந்துள்ளது. 3 வெவ்வேறு தினங்களில் அவருக்கு இதுபோன்று அனுபவமே ஏற்பட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்து அந்த நபர், ராய்ப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது எஸ்பிஐ வங்கித் தரப்பில், இணையதள சேவை இல்லாததால் பணம் வரவில்லை என்றும், இதற்குச் சம்பந்தப்பட்ட இணையதள சேவை வழங்கும் நிறுவனம்தான் பொறுப்பு என்றும் வாதிட்டப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர் அல்ல என்பதால், அவர் தங்கள் வங்கிச் சேவையின் வரம்புக்குள் வரமாட்டார் என்றும் வங்கித் தரப்பில் சொல்லப்பட்டது. 

ஆனால், அந்த வாதத்தை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம், ``3 வெவ்வேறு தினங்களில்' பணம் இல்லை' என்று ஏடிஎம் காண்பித்துள்ளது. இணையதளச் சேவை இல்லையென்றால், எப்படி ஏடிஎம் அவ்வாறு காட்டியது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காவிட்டாலோ அல்லது அந்தத் தொகை குறைந்தாலோ அபராதம் விதிக்கும் வங்கி, தனது வங்கி ஏடிஎம்மில் மட்டும் பணம் இல்லாமல் வைக்கலாமா?" என்று கேட்டதோடு, ``ஏடிஎம் பயன்பாட்டுக்கான முழு ஆண்டு கட்டணத்தையும் முன்கூட்டியே வங்கிகள் வசூலித்துக் கொள்ளும்போது, எந்த ஒரு ஏடிஎம்மையும் வாடிக்கையாளர் ஒருவர் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிமை உள்ளது" என்றும் கூறி, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு எஸ்பிஐ வங்கி 2,500 ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 

ஆகவே, இனி மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதைப் போன்று, ஏடிஎம்மில் பணம் இல்லை என்று காட்டப்பட்டால், வாடிக்கையாளர்களும் சம்பந்தப்பட்ட வங்கியிடம் அபராதம் கோரி நீதிமன்றத்தை நாடலாம்!

Post a Comment