திருச்சி இனாம்குளத்தூரில் நடக்கும் மாநில அளவிலான இஜ்திமாவிற்கு வரும் முஸ்லிம்களின் வசதிக்காக ஜன.25 முதல் ஜன.29-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டண விலக்கு அளிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநருக்கு, அதிமுக எம்.பி அன்வர் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரில் ஜன.26 முதல் 28-ம் தேதி வரை 3 நாட்கள் மாநில அளவிலான இஜ்திமாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தமிழகம் மட்டுமின்றி அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் 15 முதல் 20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் தங்கள் வாகனங்களில் இஜ்திமா நடக்கும் இடத்துக்கு வருவதற்கும், திரும்பி செல்வதற்கும் வசதியாக தமிழக சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் செலுத்த ஜன.25 முதல் 29-ம் தேதி வரை விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.