பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகள் முடிந்தால் விரைவில் அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்லலாம். காரைக்குடி – பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை முதல் வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயில் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து காலை 09.45 மணிக்கு புறப்பட்டு கண்டனூர், புதுவயல், வாழ்கிறமாணிக்கம் வழியாக அறந்தாங்கியை 10.56 வந்தடைகிறது. பிறகு 10.58 மணிக்கு புறப்பட்டு ஆயங்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு வழியாக மதியம் 12:30 மணிக்கு பட்டுக்கோட்டையை அடைகிறது.
பின்னர் அங்கிருந்து மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மாலை 04:20 மணிக்கு வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் வரும் மார்ச் 15-க்குள் நிறைவடையும் என்றார் தெற்கு ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மைப் பொறியாளர் சாம்சங் விஜயகுமார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான 147 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணியில் தற்போது காரைக்குடி ~ பட்டுக்கோட்டை வரையிலான 73 கி.மீ. தொலைவுக்கு அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருநெல்லிக்காவல் ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய உள்ளன.
இதையடுத்து, இந்த வழித்தடத்தில் மார்ச் மாத இறுதியில் முதல்கட்ட சோதனை ஓட்டமும், அடுத்து ஏப்ரல் மாதம் சிறப்பு ரயிலைக் கொண்டு அதிவேக சோதனை ஓட்டமும் நடத்தப்படும். இதை தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வார். சிஆர்எஸ் (கமிஷன் ஆப் ரயில்வே சேப்டி) அனுமதி கிடைத்த பின்னர் இவ்வழித்தடத்தில் முறையாக ரயில் சேவை தொடங்கும் என்றார்.
காரைக்குடி-திருவாரூர் ரயில் பாதை ஒரு பார்வை:
காரைக்குடி -பட்டுக்கோட்டை – திருத்துறைப்பூண்டி- திருவாரூர் இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்துக்காக ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.
இது குறித்து, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பேராவூரணி மக்கள் கூறியதாவது: திருவாரூர் – காரைக்குடி இடையே, மீட்டர் கேஜ் பாதை இருந்த போது, சென்னையில் இருந்து காரைக்குடிக்கு கம்பன் எக்ஸ்பிரஸ். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. திருவாரூர் – பட்டுக்கோட்டை; காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையே, பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு, இந்தப் பாதையில், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டன. மீன், கருவாடு, உப்பு, தேங்காய் போன்றவை சென்னைக்கும் அனுப்பப்பட்டன.
தற்போது அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டுமானால் பேருந்தில் மட்டுமே செல்ல முடிகிறது. விழா காலங்களில் பேருந்து கட்டணங்கள் மிக அதிக அளவில் உயர்த்த படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆகவே காரைக்குடி – திருவாரூர் அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அறந்தாங்கி சுற்றுவட்டார மக்களின் நீண்ட நாள் கனவான அகல ரயில் பாதை திட்டம் இன்னும் சில மாதங்களில் நனவாக உள்ளது. அதற்கு உண்டான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இறுதிக்குள் அகல ரயில் பாதை பணி முடிவடைந்து, ரயில் போக்குவரத்து தொடங்கப்படுமா என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.