பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் இந்திய அளவில் 2-ஆம் இடத்தை பிடித்தது திருச்சி விமான நிலையம்



பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் தேசிய அளவில் திருச்சி விமான நிலையம் இரண் டாம் இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலுள்ள விமானநிலையங்கள் தவிர, நாடு முழுவதும் 52 இடங்களில் இரண்டாம் நிலை(நான்-மெட்ரோ) விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின் தரம் குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை(ஏதேனும் ஒரு மாதத்தில்) இந்திய விமானநிலைய ஆணையக் குழுமத்தால் நியமிக்கப்படும் தனியார் நிறுவனம் மூலம் சர்வே நடத்தப்படும்.


அப்போது, விமான நிலைய பணியாளர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்(சிஐஎஸ்எப்), சுங்கம் (கஸ்டம்ஸ்) மற்றும் குடியேற்றப் பிரிவு(இமிகிரேசன்)அதிகாரிகள் பயணிகளிடம் நடந்துகொள்ளும் முறை, பணியாற்றும் வேகம், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த அறிவிப்பு, பார்க்கிங் வசதி, டிராலி வசதி, விமானத்துக்காக காத்திருக்கும் நேரம், உணவக வசதி, வங்கிகள், ஏடிஎம் மற்றும் பணம் பரிமாற்றும் செய்யும் மையங்கள், ஷாப்பிங் வசதி, இலவச வை-பை வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரம், அவசர ஊர்தி வசதி, விமானத்தில் கொண்டு வரும் பொருட்களை பயணிகளிடம் ஒப்படைக்கும் வேகம் உட்பட 33 வகையான கேள்விகளுக்கு, பயணிகளிடம் இருந்து பதில் பெறப்படும். அதில் கிடைக்கும் புள்ளிகள்(அதிகபட்சம் 5) அடிப்படையில், தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

இதன்படி, 2018-ம் ஆண்டின் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான அரையாண்டுக்கான சர்வே முடிவுகளை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ராய்ப்பூர்(4.86 புள்ளிகள்) முதலிடமும், திருச்சி(4.82 புள்ளிகள்) 2-ம் இடமும், உதய்ப்பூர்(4.80) 3-ம் இடமும் பிடித்துள்ளன. இதேபோல, மதுரை விமானநிலையம் (4.72 புள்ளிகள்) 7-வது இடத்தையும், தூத்துக்குடி விமான நிலையம் (4.40 புள்ளிகள்) 28-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதுகுறித்து திருச்சி விமானநிலைய இயக்குநர் குணசேகரன் கூறியபோது, “தரவரிசைப் பட்டியலில் திருச்சி விமான நிலையத்துக்கு தேசிய அளவில் 2-வது இடமும், தென்னிந்திய அளவில் முதலிடமும் கிடைத்துள்ளது. அடுத்த அரையாண்டுக்கான பட்டியலில் தேசிய அளவில் முதலிடம் பெற வேண்டும் என்பதே இலக்கு” என்றார்.

நன்றி: இந்து தமிழ் 

Post a Comment