'டிக் டாக்’ செயலிக்கு விரைவில் தடை – அமைச்சர் உறுதி



டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் உறுதியளித்துள்ளார்.

சட்டசபையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி ( மனிதநேய ஜனநாயக கட்சி) இன்று பேசுகையில், டிக் டாக் மூலம் ஆபாச செயல்களும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாகவும், எனவே, கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், உயிரை கொல்லும் விளையாட்டான புளூவேல் கேம் தடை செய்யப்பட்டது போன்று டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.

டிக் டாக் செயலி மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பல்வேறு அமைப்புகளும் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கி உள்ளன.

வித, விதமாய் வித்தியாசமாய் பல்வேறு காட்சிகளில் இளைய தலைமுறையினர் நடித்து, அதனை சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். இதற்கும் மேல் ஒரு படி தாண்டி, காவல்நிலையம் வரை சென்று டிக் டாக் செய்தவர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது நினைவிற்குரியது.

Post a Comment