சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில், பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.
நேற்று காலை ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்று ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றார். பிரதமர் மோடியும் உடனிருந்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தநிலையில், இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
10 லட்சம் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், கடந்த 2012 ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செய்தனர்.
பின்னர், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக கடந்த 2013 ஆண்டில் சவுதி அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. கடந்த (2018) ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் சென்று வந்தனர்.
இந்தநிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இந்த விவகாரம் தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மேலும் 25 ஆயிரம் பேர் ஹஜ் செல்ல இளவரசர் ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து, இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் முஸ்லிம்கள் இனி ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினத்தந்தி
