விவசாயிகளுக்கான வருமான ஆதரவு திட்டத்தின் (பிஎம்-கிசான்) கீழ் உதவித் தொகை பெற விரும்பும் விவசாயிகள், ஆதார் எண் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், முதல் தவணைக்கு மட்டும் ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அடுத்த மாதத்துக்குள் விவசாயிகளுக்கு முதல் தவணையைச் செலுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இத்திட்டத்துக்குத் தகுதியான விவசாயிகளின் தகவல்கள் அனைத்து மாநிலங்களின் உதவியுடன் நாடு முழுவதும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் மாநிலங்கள் அனைத்துக்கும் திங்கள்கிழமை சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரையுள்ள 4 மாத காலத்துக்கான உதவித்தொகை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் போலியான நபர்கள் பயனடைவதைத் தடுக்கும் நோக்கில், இத்திட்டத்துக்குத் தகுதியான விவசாயிகளிடமிருந்து தகவல்களைப் பெறும்போது, அவர்களின் ஆதார் எண்ணையும் பெற வேண்டும்.
முதல் தவணைத்தொகையைப் பெற ஆதார் எண் கட்டாயமில்லை. எனினும், இரண்டாவது தவணையிலிருந்து ஆதார் எண் அளித்த விவசாயிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். எனவே, அனைத்து விவசாயிகளிடமிருந்தும் ஆதார் எண் பெறப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
தகுதிகள்: இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற கணவன், மனைவி, 18 வயதுக்குள்ளான குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம், மாநில நிலஅளவைப் பதிவுகளின்படி பிப்ரவரி 1, 2019 அன்று 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்திருக்க வேண்டும்.
இத்திட்டத்துக்குத் தகுதியான விவசாயிகளிடமிருந்து பெயர், பாலினம், ஜாதி, ஆதார் எண், வங்கி சேமிப்புக் கணக்கு எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட தகவல்களை மாநிலங்கள் சேகரிக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள சுமார் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.