புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கடற்கரை கிராமம் ஆர்.புதுப்பட்டினம். இந்த கிராமத்தில் கடலோரத்தில் பலமணி நேரம் காத்திருந்து பெண்கள் ஊற்றிலிருந்து குடிநீர் எடுத்து வரும் அவலம் நாளுக்கு நாள் நீடித்து வருகிறது.
இங்கு சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர். கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த ஊரில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அப்பகுதி மக்கள் கடற்கரை ஓரத்தில் உள்ள மணல் திட்டில் ஊற்று தோண்டி, அதில் ஊரும் தண்ணீரையே எடுத்து வந்து குடிக்கவும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கடலுக்கு சில அடி துாரத்தில் ஆர்.புதுப்பட்டினம் பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவுள்ள மணல் திட்டு உள்ளது. இந்த மணல் திட்டிற்கு செல்லும் அப்பகுதி பெண்கள் சுமார் 2 அடி முதல் 4 அடிவரை மணலை தோண்டுகின்றனர். அவ்வாறு தோண்டும்போது, அந்த பள்ளத்தில் நன்கு சுகாதாரமான, சுவையான தண்ணீர் ஊறுகிறது. தண்ணீர் ஊறும் வரை காத்திருக்கும் பெண்கள், தாங்கள் கொண்டு வந்துள்ள அகப்பையால் தண்ணீரை மொண்டு, குடங்களில் நிரப்பி வீட்டிற்கு எடுத்து சென்று குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் ஊர் மக்கள் பல ஆண்டுகளாக ஊற்று தோண்டி அதிலிருந்து ஊறும் தண்ணீரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். முன்பு 2அடி தோண்டினாலே தண்ணீர் ஊறும். ஆனால் இப்போது ஒருசில இடங்களில் 4 முதல் 5அடி வரை தோண்ட வேண்டி உள்ளது. முன்பை விட தற்போது தண்ணீர் ஊறுவது குறைந்து விட்டது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்து செல்ல வேண்டி உள்ளது.
எவ்வளவு நேரம் காத்திருந்தாலும், ஊற்று தண்ணீரை தவிர எங்களுக்கு வேறு தண்ணீரை பயன்படுத்த பிடிப்பதில்லை. மேலும் ஊற்றுத்தண்ணீரை குடிப்பதால், எங்களை பல்வேறு நோய்கள் தாக்குவதில்லை. கடலுக்கு அருகிலேயே உள்ள மணல் திட்டில் நல்ல தண்ணீர் எடுப்பதால், கிராமத்தின் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் அப்பகுதியில் அசுத்தம் செய்யவோ, குப்பை கொட்டவோ மாட்டார்கள். மேலும் அப்பகுதியில் ஓடும் ஆற்றை கடந்து செல்ல பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு தினமும் மினரல் வாட்டர் வாகனம் வந்தாலும், எங்களுக்கு இயற்கை தந்த மினரல் வாட்டரான ஊற்று தண்ணீரையே பயன்படுத்த விரும்பு கிறோம். இந்த பகுதியை சுற்று இரும்பு வேலி அமைத்து, இப்பகுதியிலும், அங்கிருந்து ஊருக்கு செல்வதற்கும் மின்சார விளக்கு வசதி செய்து கொடுத்தால், வெயிலில் காயாமல் இரவு நேரத்திலும் தண்ணீர் எடுக்க வாய்ப்பாக அமையும் என்றனர்.ஆயுளை இழந்து நிற்கும் நிலைமனிதன் இயற்கையில் இருந்து செயற்கையை நோக்கி சென்றதால், இன்று பல்வேறு கொடி நோய்களுக்கு ஆளாகி, பொருளை, ஆயுளையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடலுக்கு வெகு அருகில், மணலை தோண்டி பல ஆண்டுகளாக ஊற்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வரும் ஆர். புதுப்பட்டி னம் கிராம மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஊற்று தண்ணீர் தொடர்ந்து கிடைக்க அரசு அப்பகுதியை சுற்றிலும் வேலி அமைத்து, விளக்கு வசதி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
நன்றி: தினகரன்