அதிமுக கூட்டணியில் பாஜக~அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !



சென்னையில் நடைபெற்ற அதிமுக பாஜக இடையேயான தேர்தல் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டு… பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிகள் எவை என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்த சந்திப்பில் பாஜக உடனான கூட்டணியை இறுதி செய்ய அதிமுக, பாஜக தலைவர்களிடையே 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. சந்திப்பில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜக சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், முரளிதரராவ், தமிழிசை சௌந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. தொகுதிகளை பெறுவதில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியே ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகின.

2 மணி நேரத்துக்கு பின் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் பியூஷ் கோயல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் பாஜக ஆதரவு அளிக்கும் என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் பேசிய பிறகு பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது: தமிழகம், புதுச்சேரியில் 40ம் நமது என்ற முழக்கத்துடன் அதிமுக,பாஜக இணைந்து வரும் லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டணி செயல்படும். கூட்டணி தொடர்பாக… அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை இனிமையாக இருந்தது என்று கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக-பாமக அமைத்துள்ள இக்கூட்டணி வெற்றி பெருமா ? தமிழகத்தில் தாமரை மலருமா ? பொறுத்திருப்போம் தேர்தல் முடிவுகள் வரும் வரை.

Post a Comment