புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமத்திலும் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரதம மந்திரி கிசன் சம்மன் நிதித்திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமத்திலும் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரதம மந்திரி கிசன் சம்மன் நிதித்திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் (ஐந்த ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் உள்ளவர்கள்) வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு விவசாய குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளில் ஒரு தவணைக்கு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகவல் பதிவேற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தில் தகுதியுள்ள விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக எதிர்வரும் 25.02.2019 முதல் 27.02.2019 வரை மூன்று தினங்கள் அனைத்து கிராமத்திலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இதுவரை விண்ணப்பம் அளிக்காத தகுதியுள்ள விவசாயிகள் தங்களுடைய கணினி சிட்டா நகல், ரேசன் கார்டு நகல், வங்கி பாஸ் புக் நகல், தொலைபேசி எண் மற்றும் போட்டோ  ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை உடன் அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

 இம்முகாமின்போது விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக வேளாண்துறை உதவி வேளாண்மை அலுவலர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உடன் இருப்பார்கள். மேலும் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலக வேலை நேரங்களில் இச்சிறப்பு முகாம் நடைபெறும்.

 எனவே தகுதியுள்ள விடுபட்டுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விபரங்களை உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment