தமிழகத்தில் ஏப்.1ம் தேதி முதல் அமல்! 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!!



தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் கன்னியூர் (கோவை), பட்டறைபெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம், பரனூர் (விழுப்புரம்), ஆத்தூர் (சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளிகொண்டான் (வேலூர்), வாணியம்பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (நெல்லை), கப்பலூர் (நெல்லை), நாங்குநேரி (நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி (திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக்குடி (சிவகங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்) ஆகிய 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன்படி 52 கி.மீ நீளமுள்ள சாலைக்கு ஒரு தடவை செல்ல:

கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.60லிருந்து ரூ.65 ஆகவும்,

இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினி பஸ் ரூ.95லிருந்து ரூ.100 ஆகவும்,

லாரி, ஆம்னி பஸ்களுக்கு ரூ.195லிருந்து ரூ.200 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்கள் ரூ.215லிருந்து ரூ.225 ஆகவும்,

கனரக வாகனங்களுக்கு ரூ.305லிருந்து ரூ.315 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.375லிருந்து ரூ.385 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் 490 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தை பொறுத்தவரை 44 சுங்கச்சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில், குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது’ என்றார். இந்த சுங்க கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படும் என்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments