மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு 33 சதவீதம் அரசு வேலை



மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்கப்படும் என்று சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி  அளித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், `மாற்றம் கொண்டு வருவோர்’ என்ற தலைப்பில் மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்  கலந்து கொண்டார். அப்போது அவர், மாணவிகள் மத்தியில் பேசினார். பின்னர் மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்தார்.


ஹசிரியா: பெண்கள் சமத்துவம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

ராகுல்: வடஇந்தியாவை காட்டிலும் தென்மாநிலங்களில் பெண்கள் சமத்துவத்துடன் உள்ளனர். உ.பி., பீகாரில் மோசமாக உள்ளது. தமிழகத்தில் சிறப்பான கலாச்சாரம், பண்பாடு உள்ளதால் பெண்கள் சமத்துவம் போற்றப்படுகிறது.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்புகள் போன்று மத்திய அரசு வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். அது வேலைவாய்ப்பிலும் உறுதி செய்யப்படும். 

விஷாலி: பண மதிப்பு நீக்கம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

ராகுல்: அது எதிர்மறையான முடிவைத்தான் கொடுத்தது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மக்கள் கஷ்டப்பட்டார்கள். 5 விதமான ஜிஎஸ்டி வரிகள் திணிக்கப்பட்டதால் சிறு, குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. நாங்கள்  ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரி மறுசீரமைக்கப்படும். 

லியோனா: உங்கள் தாயிடம் நீங்கள் கற்ற பாடம் என்ன?

ராகுல்: என் தாயிடம் பணிவை கற்றுக்கொண்டேன். எல்லோரையும் மதிக்கக்கூடிய பண்பை கற்றுக்கொண்டேன். பெண்கள் மீது உயர் மதிப்பை வைத்திருக்கிறேன். எனது தாயாரிடம் இருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.

லட்சுமிமேனன்: எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள நீங்கள் ஊழல், நாட்டின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்?

ராகுல்: அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட்டு ரபேல் விவகாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஒரு நிமிடம் ரபேல் குறித்து பேச தயாரா. பிரதமரை விசாரணைக்கு உட்படுத்த  வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக எச்ஏஎல் நிறுவனம் விமான தயாரிப்பு பணிகளை செய்து வருகிறது. ஆனால், ரபேல் போர் விமான விஷயத்தில் மோடி மிகப்பெரிய ஊழலை நடத்தியுள்ளார். மிராஜ் 2000, சுகாய் போன்ற  விமானங்கள் காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்டு இன்று பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியது. பிரதமர் மீது நாங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பொது மேடையில் பேச அவர் தயாராக இருக்கிறாரா. தற்போது 3000  மாணவிகள் முன்பு நான் வெளிப்படையான கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். அவர் அதுபோன்ற கலந்துரையாடலுக்கு தயாரா.

சுஷ்மிதா: வரும் மக்களவை தேர்தலில் தென்மாநில கட்சிகளுக்கு உங்களது ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா?

ராகுல்: கண்டிப்பாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மரியம்: தீவிரவாதம், பாகிஸ்தான் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

ராகுல்:  மேற்கண்ட பிரச்னைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியில் ஓரளவு தீர்வு காணப்பட்டது. புல்வாமா தாக்குதலை தடுக்க மத்திய அரசு தவறி  விட்டது. இவ்வாறு கலந்துரையாடல் நடந்தது.




ராகுல் சார்... வேண்டாம்...
மாணவிகள் கேள்விகளை கேட்க தொடங்கும்போது, ஹாய் சார்... ராகுல் சார்... என்று அழைத்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய ராகுல் காந்தி, நீங்கள் என்னிடம் கேட்கும்போது ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல்  என்று அழைத்தாலே போதும் என்று கூறினார்.

Post a Comment

0 Comments